சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா 1- இஸ்ரோ ஆலோசகர் சிவன் பேட்டி..!

விருதுநகர்: சூரியனை ஆராயக்கூடிய ஆதித்யா 1 தயாராகி வருவதாக இஸ்ரோ ஆலோசகர் சிவன் தெரிவித்துள்ளார். விருதுநகர் பெண்கள் கல்லூரி பட்டமளிப்பு விழாவிற்கு வந்த இஸ்ரோ முன்னாள் தலைவரும், ஆலோசகருமான சிவன் விருதுநகர் மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: இஸ்ரோவில் ஏராளமான ஆய்வுகள் நடந்து வருகிறது. விண்ணிற்கு மனிதனை அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டம் வேகமாக நடந்து வருகிறது. மனிதர்களை அனுப்பும் முன்பாக பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகள் நடந்து வருகிறது. சந்திராயன் 3ஐ விண்ணில் செலுத்துவதற்காக தயாராகி கொண்டு இருக்கிறது. சூரியனை ஆராயக்கூடிய ஆதித்யா 1 தயாராகி வருகிறது.

விண்வெளியில் நமது வளர்ச்சியை பார்த்து, நமது விண்கலன்கள் மூலம் மற்ற நாடுகள் தங்களது செயற்கைக்கோள்களை ஏவ விருப்பம் தெரிவிக்கின்றன. டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு செயற்கைக்கோள் தேவை அதிகமாக உள்ளது. இதனால் இஸ்ரோ வளர்ச்சி அதிகரித்துள்ளது. நெல்லையில் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு தேவையான நிலங்களை தமிழ்நாடு அரசு வழங்கி உள்ளது. கட்டுமான ஆயத்த பணிகள் துவங்க உள்ளது. மண் உறுதித்தன்மை சோதனை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். பேட்டியின்போது இஸ்ரோ முன்னாள் தலைமை பொது மேலாளர் சிவசுப்பிரமணியன் உடனிருந்தார். அதன்பின் காமராஜர் நினைவு இல்லத்தில் சிவன் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.