மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை, குறிப்பாக உலகின் மிக முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஏற்பட்டுள்ள தேக்கம் காரணமாக, கச்சா எண்ணெய் விலை உலகளவில் விண்ணைத் முட்டி வருகிறது. இதன் காரணமாக, இந்தியாவில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் தொடர்ந்து 4-வது முறையாக எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மே 15 அன்று மத்திய அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தின. அதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு மேலும் 90 காசுகள் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் 2 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதால் அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்துச் செலவு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது காய்கறிகள், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அன்றாடப் பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுத்து, பொதுமக்களின் மாதாந்திர பட்ஜெட்டை கடுமையாகப் பாதிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.








