கந்து வட்டி கேட்டு மிரட்டும் வாலிபர்: கோவை கலெக்டர் அலுவலத்தில் தற்கொலைக்கு முயன்ற மாற்றுதிறனாளி..!!

கோவை அன்னூரை அடுத்த பதுவம்பள்ளியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 47). மாற்றுதிறனாளி. இவர் அங்கு கூலி வேலை செய்து வருகிறார்.

இவர் அன்னூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் தென்னம்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெயராமன் (38) என்பவரிடம் எனது வீட்டு பத்திரத்தை வைத்து ரூ.3 லட்சத்தை கந்து வட்டிக்கு கடன் வாங்கினேன். அதற்கான வட்டியை 6 மாதம் நான் சரியாக செலுத்தி வந்தேன். பின்னர் கொரோனா காலகட்டத்தில் என்னால் வட்டியை செலுத்த முடியவில்லை. இதனால் ஜெயராமன் எனக்கு கோர்ட்டு நோட்டிஸ் அனுப்பினார். இதையடுத்து நான் அக்கம் பக்கம் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி அவருக்கு ரூ.4.80 லட்சத்தை கொடுத்தேன். ஆனால் அவர் அந்த பணத்தை பெற்று கொண்டு எனது வீட்டு பத்திரத்தை திருப்பு தரவில்லை. மேலும் ரூ.80 ஆயிரத்தை கொடுத்தால் தான் பத்திரத்தை தருவேன் என்று கூறிவிட்டார். பலமுறை வீட்டு பத்திரத்தை கேட்டும் அவர் தரவில்லை. இதனால் மனவேதனை அடைந்த நான் கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் அன்று மண்எண்ணை கேனுடன் சென்று தற்ெகாலை செய்து கொள்ள முயற்சி செய்தேன்.
அப்போது என்னை போலீசார் காப்பாற்றி கலெக்டரிடம் மனு அளிக்க கூறினர். நான் மனு அளித்தேன். கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்த போலீசில் புகார் அளித்தேன். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார். இதுகுறித்து அன்னூர் போலீசார் ஜெயராமன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.