கோவை தொழிலதிபரிடம் ஆப்பிள் தொழில் செய்யலாம் எனக் கூறி 1.24 கோடி மோசடி செய்த பல் மருத்துவ தம்பதி..! .

கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ரமேஷ். இவருக்கு 2 வருடங்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த பல் மருத்துவர் தம்பதியினரான அரவிந்தன் துர்காபிரியா என்பவர்கள் அறிமுகமாகியுள்ளனர். இந்நிலையில் அத்தம்பதியினர் ரமேஷிடம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி தொழில் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் துருக்கியில் இருந்து ஆப்பிள் கண்டெய்னர் ஒன்று வருவதாகவும் அதற்கு 1 கோடியே 24 லட்சத்து 60 ரூபாய் செலுத்தினால் இரண்டு கோடி ரூபாய் லாபம் பெறலாம் என தெரிவித்திருக்கின்றனர். இதனை நம்பிய ரமேஷ் கடந்த ஆண்டு 1.24 கோடியை தந்திருக்கிறார். ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்கு ஆப்பிள் கண்டெய்னர் வராமல் இருந்துள்ளது இதனால் முதலீடு செய்த பணத்தை ரமேஷ் திருப்பி கேட்ட போது அத்தம்பதியினர் தராமல் இழுத்தடித்து வந்துள்ளனர்.

இது குறித்து ரமேஷ் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சென்னையில் இருந்த அரவிந்தனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அத்தம்பதியினர் ரமேஷ் அளித்த பணத்தை வைத்து ஒரு சினிமா தயாரிப்பு கம்பெனி ஒன்றை ஆரம்பித்தது தெரியவந்தது. மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள அரவிந்தனின் மனைவி துர்காபிரியாவை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இதுபோன்று வேறேனும் மோசடிகளில் ஈடுபட்டுள்ளார்களா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.