தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித் துறை பராமரித்து வந்த வங்கி கணக்குகளில் இருந்து சுமார் 22.10 கோடி ரூபாய் நிதி ஆன்லைன் வாயிலாக ஹேக் செய்யப்பட்டுச் சுருட்டப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கிராமப்புற சுகாதார மையங்கள் உள்ளிட்டவற்றுக்கு ஒதுக்கப்பட்ட இந்த நிதி மோசடி தொடர்பாகச் சைபர் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் வங்கி கணக்குகளைக் குறிவைத்து ஆன்லைன் மோசடிகள் அரங்கேறி வந்த நிலையில், தற்போது அரசு கஜானா மற்றும் அதிகாரப்பூர்வ வங்கி கணக்குகளுக்கே ஹேக்கர்கள் குறிவைத்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் பல்வேறு ஊராட்சி ஒன்றியங்களால் பராமரிக்கப்பட்டு வந்த வங்கி கணக்குகளை இணையவழியில் ஹேக் செய்து, சுமார் 22.10 கோடி ரூபாய் நிதியை மர்ம நபர்கள் சுருட்டியுள்ளனர். இப் பகீர் சம்பவம் குறித்துத் தமிழ்நாடு சைபர் குற்றப்பிரிவு (Cyber Crime) காவல் துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
கிராமப்புறங்களில் ஆரம்பச் சுகாதார நிலைகள் மற்றும் மக்கள் நல திட்டங்களைச் செயல்படுத்துவதற்காகச் சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களின் பெயர்களில் அரசு வங்கி கணக்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றிய வங்கிக் கணக்கில் இருந்து ரூ.14 கோடியும், நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியக் கணக்கில் இருந்து ரூ.5 கோடியும், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியக் கணக்கிலிருந்து ரூ.3.10 கோடியும் என மொத்தம் 22.10 கோடி ரூபாய் ஹேக் செய்யப்பட்டு அபேஸ் செய்யப்பட்டுள்ளது.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (BDO) மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு நிதியை மாற்றுவதற்காகச் சென்னையிலிருந்து கண்காணிக்கப்பட்டு வந்த கணக்குகளில் இணையவழியாக ஊடுருவி இத் தொகை அபேஸ் செய்யப்பட்டுள்ளது.
அரசுத் துறைகளின் வங்கி கணக்குகள் ஹேக் செய்யப்பட்டிருப்பது நிர்வாக மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.முன்னதாகப் புதுச்சேரி மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவக் கல்லூரி வங்கி கணக்கில் இருந்து ரூ.8.85 கோடி இதேபோன்று டிஜிட்டல் முறையில் சுருட்டப்பட்டது. இதன் பின்னணியில் நைஜீரியாவைச் சேர்ந்த சர்வதேசச் சைபர் குற்றக் கும்பல்கள் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதே பாணியில் தான் தமிழக அரசின் 22.10 கோடி ரூபாயும் மர்ம நபர்களால் லாகின் விபரங்களைத் திருடி மாற்றி அனுப்பப்பட்டுள்ளதா என்பது குறித்துத் தமிழகச் சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
பொதுமக்களின் வரிப் பணமான பல கோடி ரூபாய் நிதி அரசு வங்கி கணக்குகளிலிருந்தே ஹேக் செய்யப்பட்டுள்ளது, சைபர் பாதுகாப்புத் தளத்தின் பலவீனத்தைச் சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது. கணக்கு விவரங்களை ஊடுருவியது யார், போலி பரிவர்த்தனைகளுக்கு எவ்வாறு ஒப்புதல் பெறப்பட்டது, பணம் அனுப்பப்பட்ட போலி வங்கிக் கணக்குகள் எவை என்பது குறித்துப் வங்கி அதிகாரிகள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளிடம் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
சட்டவிரோதப் பரிவர்த்தனைகள் நடைபெற்ற குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளை முடக்கும் பணிகளிலும், திருடப்பட்ட நிதியை மீட்டெடுப்பதற்கான (Fund Recovery) நடவடிக்கைகளிலும் சைபர் பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அரசு கஜானாவுக்கே சவால் விடுக்கும் வகையில் 22.10 கோடி ரூபாய் நிதியை டிஜிட்டல் முறையில் சுருட்டிய மர்ம நபர்களைப் பிடிக்கத் தமிழ்நாடு சைபர் குற்றப்பிரிவு தீவிர வேட்டை நடத்தி வருவதுடன், இனிவரும் காலங்களில் அரசு கணக்குகளின் இணையப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.









