விவசாயிகளுக்கு குட் நியூஸ்! ஊக்கத்தொகையை உயர்த்திய CM விஜய்

நெல் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை உயர்த்தி முதலமைச்சர் ஜோசப் விஜய் தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.தமிழ்நாட்டில் நடத்தப்படும் அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் முன்மொழிந்த அரசினர் தனி தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்த நிலையில் குரல் வாக்கெடுப்பு மூலம் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து தமிழக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் ஜோசப் விஜய், தமிழக விவசாயிகள் நெல் மற்றும் கரும்புகளை அறுவடை செய்து விற்பனை செய்திட தங்களது உடல், பொருள், ஆவி என அனைத்தையும் செலவிட்டு வருகின்றனர். தற்போதைய அரசின் நிதிநிலை சரியில்லை என்றாலும் கூட நெல் மற்றும் கரும்பு விவசாயிகளின் நலனை பாதுகாத்திட நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்கிட தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 289 ரூபாய் கூடுதலாகவும், பொது ரக நெல்லுக்கு 159 ரூபாயும் உயர்த்தி வழங்கப்படும் எனவும், அதன் மூலம் சன்னரக நெல் குவிண்டாலுக்கு 2,750 ரூபாயும், பொதுரக நெல் குவிண்டாலுக்கு 2,600 ரூபாயும் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக கரும்புக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை மெட்ரிக் டன் ஒன்றுக்கு 3290.50 ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில், நடப்பாண்டில் கூடுதலாக 709.50 ரூபாய் சிறப்பு ஊக்கத் தொகையாக வழங்கப்படும். இதன் மூலம் விவசாயிகளுக்கு கரும்புக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை 4,000 ரூபாயாக வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்தார்.

தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ஊக்கத்தொகை உயர்த்தி வழங்கியிருப்பதாகவும், விவசாயம் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் சிறக்க அரசு உறுதியாக இருப்பதாகவும் முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.