நீட் தேர்வு – சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தொடர்பான விவாதம் இன்று மூன்றாவது நாளாக நடைபெற உள்ளது.

நேற்றைய கூட்டத்தொடரில் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் இன்று நீட் மற்றும் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்ட (எஃப்சிஆர்) திருத்த மசோதா ஆகியவற்றுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

இந்த நிலையில், மத்திய அரசு நடத்தி வரும் நீட் தேர்வை திரும்ப பெற்று மாநில மருத்துவ பாடத்திட்ட மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் தனித் தீர்மானத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் தாக்கல் செய்ய உள்ளார்.

நீட் தேர்வில் இருந்து தமிழ் நாட்டிற்கு விலக்கு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதாவை கடந்த 2021-இல் தமிழக சட்டப்பேரவை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. எனினும், இந்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் அப்போது ஒப்புதல் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.