போதை இல்லா கோவைக்காக ஓடுவோம் மாரத்தான்

போதை இல்லா கோவைக்காக ஓடுவோம்” மாரத்தான் மாவட்ட போலீஸ் சார்பில் நடக்கிறது. இதுகுறித்துகோவை மாவட்ட போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்கூறியிருப்பதாவது:-
போதைப்பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, “போதை இல்லா கோவை” என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த கோவை மாவட்ட எஸ்பி., பவன்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன் படி வரும் 8-ம் தேதி (சனிக்கிழமை) போலீசார் சார்பில் மாரத்தான் நடைபெறவுள்ளது.
இந்த மாரத்தான், ஒரு நோக்கத்திற்காக ஓடுவோம், போதை இல்லா கோவைக்காக ஓடுவோம்
என்ற கருப்பொருளுடனும், ஒரு முடிவின் தொடக்கம் – ஒவ்வொரு நிறைவும் ஒரு புதிய தொடக்கம் என்ற முழக்கத்துடனும் நடத்தப்பட உள்ளது. இப்போட்டி காலை 5 மணிக்கு தொடங்குகிறது. இதில், 5 கிலோமீட்டர் ஓட்டப்பந்தயம் – அனைத்து வயதினருக்கும், 2 கிலோமீட்டர் ஓட்டப்பந்தயம் – 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்காக என இரண்டு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளது.
இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்பது முற்றிலும் இலவசம். அனைத்து தரப்பினரும் எந்தவித கட்டணமும் இன்றி இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பங்கேற்கலாம். போட்டியில் வெற்றி பெறுவோருக்கு மொத்தம் ரூ.1 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படுகின்றன. மேலும், போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்யும் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் பங்கேற்பு நிறைவு சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.