நேபாளத்தில் நூற்றுக்கணக்கானோரின் உயிரைப் பலி வாங்கிய பெருவெள்ளப் பேரழிவுக்கு இமயமலையில் 5,200 மீட்டர் உயரத்தில் ஏற்பட்ட மாபெரும் பனிப்பாறை உடைவே காரணம் என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் புதிய அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.
ரசுவா அருகே லாங்டாங் லிருங் பகுதியில் மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று உடைந்து, பாறைகள் மற்றும் சேறு-சகதியுடன் லெண்டே ஆற்றில் விழுந்துள்ளது. அது பின்னர் போடேகோஷி மற்றும் திரிசூலி ஆறுகளில் கலந்து, சிதைவுகள் நிறைந்த ஒரு அசுர சக்திவாய்ந்த வெள்ளமாக மாறி அடிவாரப் பகுதிகளை நோக்கிப் பாய்ந்து பேரழிவை ஏற்படுத்தியுள்ளது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
முதலில் இந்த விபரீதத்திற்கு நிலநடுக்கம் அல்லது பனி ஏரி உடைந்ததே காரணம் என்று கருதப்பட்ட நிலையில், தற்பொழுது செயற்கைக்கோள் படங்கள் மூலம் சுமார் 0.56 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பனியாற்றின் ஒரு பகுதி உடைந்து பிரிந்திருப்பது துல்லியமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. நேபாள அரசின் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் நடத்திய இந்த ஆய்வு குறித்து நேபாள பேரிடர் மேலாண்மை மைய தலைவர் பிஷால் நாத் உப்ரெட்டி அதிகாரப்பூர்வமாக விளக்கியுள்ளார். இருப்பினும், இந்த உலகையே உலுக்கிய வரலாற்றுப் பேரழிவின் முழுமையான மற்றும் துல்லியமான காரணங்களை வெளிக்கொண்டு வர விஞ்ஞானிகள் தங்களது ஆய்வைத் தொடர்ந்து தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.









