சென்னை மாநகராட்சி சார்பில் 64,586 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி சார்பில், தெருநாய்கள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கு (நாய், பூனை) மைக்ரோசிப் செலுத்துதல், வெறிநாய்க்கடி நோய்த்தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த மேலாண்மைக்காக மேம்படுத்தப்பட்ட இணையதள சேவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த இணையதள சேவை, செல்லப் பிராணிகள் மற்றும் தெருநாய்களின் தடுப்பூசி விவரங்கள், அடுத்த தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய தேதிகளை திறம்பட கண்காணிக்க உதவுகிறது.
செல்லப்பிராணிகளுக்கு ஆண்டுதோறும் வெறிநாய்க்கடிநோய்த் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தவும், இந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட நாள் முதல் ஓராண்டு காலத்துக்கு மட்டும் உரிமம் செல்லத்தக்கது என்பதை உறுதிப்படுத்தி மீண்டும் உரிமம் புதுப்பிக்கப்படுவதை உறுதி செய்யவும், செல்லப்பிராணிகள் கைவிடப்படுவதை தடுப்பதற்காகவும் செல்லப்பிராணிகளுக்கு மைக்ரோ சிப் செலுத்தி உரிமம் பெறுவது மாநகராட்சியில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த மைக்ரோ சிப்பில் செல்லப்பிராணிகளின் உரிமையாளரின் பெயர், முகவரி உள்ளிட்ட தரவுகள் பதிவு செய்யப்படும். இணையதளத்தில் இதுவரை 1,26,781 செல்லப்பிராணிகள் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் உரிமம் கோரி 1,15,119 செல்லப் பிராணிகளின் உரிமையாளர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவற்றில் 74,740 செல்லப்பிராணிகளுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி 64,586 செல்லப்பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளன.மைக்ரோ சிப், பொருத்தி, தடுப்பூசியும் செலுத்திக்கொண்ட செல்லப்பிராணிகளுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்படும் என்ற விதி இருப்பதால், தற்போது வரை 64,586 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளன.
எனவே, செல்லப் பிராணிகளுக்கு மைக்ரோ சிப் பொருத்தவும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும், உரிமத்தை புதுப்பித்துக் கொள்ளவும் மாநகராட்சியின் திரு.வி.க.நகர், புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாபேட்டை, மீனம்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள செல்லப்பிராணி மருத்துவமனைகளில் இலவசமாக சேவையை பெறலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.







