மும்பை உட்பட மகாராஷ்டிராவின் பல பகுதிகளிலும் பருவமழை தீவிரம் அடைந்து தொடர்ந்து வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில் மான்கூர்டு பகுதியில் கட்டப்பட்டிருந்த 4 மாடி கட்டிடம் இடிந்து, அருகில் உள்ள வீட்டில் விழுந்தது. குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். மும்பையில் நேற்றும் பலத்த மழை கொட்டியது. சாலையிலும் ரயில் தண்டவாளங்களிலும் தண்ணீர் தேங்கியது. இதனால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
பிம்ப்ரி சிஞ்ச்வட்டில் மோர்யா கோசாவி கணபதி கோயில் தண்ணீரில் மூழ்கியது. புனேயிலும் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. மாவல் பகுதியில் உள்ள படான் கிராமத்தில், நிலச்சரிவில் வீடு புதையுண்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். இதற்கு அருகே தலேகாவ் பகுதியில் பஸ் ஒன்றில் சிக்கியிருந்த 30 பேரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். புனேயில் மாவல் பகுதியில் அதிகபட்சமாக 23.73 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி 48 மணி நேரத்தில் மும்பை நகரில் 30 செமீ மழையும், கிழக்கு புறநகர்ப் பகுதிகளில் 38 செமீ மழையும், மேற்கு புறநகர்ப் பகுதிகளில் 34.5 செமீ மழையும் பதிவாகியுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோபோலி-குஸ்காவ் மிஸ்சிங் லிங்க் சாலையில் உள்ள சுரங்கப்பாதை 2ல் வெளியேறும் பகுதிக்கு அருகே ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, புனேவிலிருந்து மும்பை செல்லும் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.
தண்டவாளத்தில் நீர் தேக்கம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 40க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. வடக்கு மும்பையில் உள்ள மனோரி அருகே அல் ஜப்சியா என்ற வர்த்தக கப்பல் தரை தட்டியது. மும்பையில் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை 4 நாளில் கொட்டித் தீர்த்து விட்டதாக முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் தெரிவித்தார்.







