பகலில் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிருங்கள் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.கடும் வெயில் காணப்படும் பகல் நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிருங்கள் என்றும் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டியிருந்தால் தண்ணீர் கேன் எடுத்துச் செல்லுங்கள் என்றும் பிரதமர் மோடி அறிவுரை தெரிவித்தார்.தாகத்தோடு வருவோருக்கு ஒரு குவளை நீர் கொடுங்கள் என்றும்; நாட்டின் பல பகுதிகளில் வெப்பம் கடுமையாக உள்ளது என்றும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். வீடு, கடைகளுக்கு வெளியே குடிநீர் வைத்துள்ளவர்களை நான் பாராட்டுகிறேன் என்றார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் வெப்ப அலை வீசி வருகிறது. வெயிலும், வெப்பமும் அதிகமாக இருக்கும் காரணத்தினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்தே பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி அவரது X தளத்தில், “இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வரும் வெப்பநிலையும் அதனால் ஏற்படும் சவால்களும் காணப்படுகின்றன. இந்த வெப்பம் நம் அனைவருக்கும் கடுமையானதாகும். எனவே, உங்களால் முடிந்தவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தயவு செய்து தண்ணீர் அருந்திக்கொண்டே இருங்கள். வெளியே செல்லும்போது தண்ணீரை உடன் வைத்திருங்கள். மற்றவர்களுக்கும் தண்ணீர் கொடுங்கள். இதுபோன்ற காலநிலையில் இத்தகைய கருணை மனதிற்குப் பேருதவியாக அமையும்” குறிப்பிட்டிருந்தார்.
அறிகுறிகள் என்ன?
தலைசுற்றல், குமட்டல் அல்லது அதீத சோர்வு போன்ற வெப்பத்தினால் வரும் சோர்வின் அறிகுறிகளை கவனியுங்கள்.மற்றவர்களுக்கும் வழக்கறத்திற்கு மாறாக உடல்நலக்குறைவாக உணர்ந்தாலோ, தலைவலி ஏற்பட்டாலோ, பலவீனமாக உணர்ந்தாலோ உடனே அவர்களை நிழலான இடத்திற்கு உடனே அழைத்துச் சென்று உதவ வேண்டும்.அவர்களுக்கு உதவும் வகையில் தண்ணீர், ORS போன்றவை கிடைக்க வழிவகை செய்யுங்கள்.குழந்தைகள், முதியவர்கள், வெளியில் வேலை செய்பவர்கள் அதீத வெப்பத்தின் காரணமாக பாதிக்கப்படுவார்கள். இந்த அறிகுறிகளை புறக்கணிப்பது விரைவில் ஆபத்தானதாக மாறக்கூடும்.இது வெப்ப பக்கவாதத்திற்கு வழிவகுக்கலாம். எனவே, சரியான நேரத்தில் கவனித்துக்கொள்வது நல்லது.எனவே, கடுமையான வெப்பத்தின் அறிகுறிகள் மற்றும் அதனை தொடர்ந்து செய்ய வேண்டிய விஷயங்களை பிரமதர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
பறவை, விலங்குகளுக்கு தண்ணீர் வையுங்கள்
எனவே, முடிந்த போதெல்லாம் வயதான பெற்றோர், தாத்தா பாட்டி மற்றும் அன்புக்குரியவர்களைத் தொலைபேசியில் அழைத்து நலம் விசாரியுயங்கள்.அவர்கள் போதுமான அளவுக்கு தண்ணீர் குடிக்கவும், நண்பகல் நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்கவும், முடிந்தபோதெல்லாம் ஓய்வெடுக்கவும் நினைவூட்டுங்கள்.அதேநேரத்தில், கடும் வெயிலில் நம்மை சுற்றியிருக்கும் பறவைகள், விலங்களையும் நினைவில் கொள்ள வேண்டும்.
உங்கள் வீடு, பால்கனிகள், மொட்டை மாடிகள், கடைகள் அல்லது அலுவலகங்களுக்கு வெளியே சிறிய கிண்ணத்தில் தண்ணீர் வைக்கலாம். சிறிய கிண்ணத்தில் தண்ணீர் வைத்தால், தாகமாக இருக்கும் பறவைகளுக்கு அது பெரும் நிவாரணத்தை கொடுக்கும். இந்த கடினமான நாட்களில் கருணை நம்மை வழிநடத்தட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.







