முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின் : “யாகத் திருநாளான பக்ரீத் திருநாளில், என்றென்றும் என் நேசத்திற்கும் பாசத்திற்கும் உரியோராகத் திகழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய வாழ்த்துகள்! அவர்களது வாழ்வில் நலமும் வளமும் பெருகட்டும்!ஈத்துவக்கும் இன்பம்” என்று வள்ளுவப் பெருந்தகையால் போற்றப்பட்ட ஈகைப் பண்போடு, ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை ஏழை, எளியோர் இன்னல் தீர வழங்கி மகிழ்வதை வாழ்வறமாகக் கொண்டு, நபிகள் நாயகம் வழங்கிய அறிவுரைகளை வாழ்க்கை நெறியாகக் கடைப்பிடித்து வாழும் இஸ்லாமியப் பெருமக்களது வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலைபெறட்டும்.இஸ்லாமிய சமூகத்திற்கும் திமுகவுக்கும் இடையேயான உறவு, அரசியல் மற்றும் சமூகக் காரணங்களைத் தாண்டிய ஆழத்தையும், மேன்மையையும், உண்மையான பிணைப்பையும் கொண்டது. திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இஸ்லாமிய சமூகத்தின் பாதுகாப்புக்காகவும் உரிமைகளுக்காகவும் தோளோடு தோள் நின்று போராடும் உணர்வைக் கொண்ட உற்ற தோழமை என்பதை விவரிக்கத் தேவையில்லை. அந்த உறவும் நெருக்கமும் என்றென்றும் தொடரும் என்பதை, இந்த நன்னாளில் மேலும் உறுதி செய்ய விரும்புகிறேன்.
இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் கனிந்த பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் உரித்தாக்குகிறேன்” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி : இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்தத் தியாகத்திற்கும் தயங்க மாட்டார்கள் என்ற தத்துவத்தைப் பறைசாற்றும் திருநாளாம் ‘பக்ரீத்’ திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த `பக்ரீத்’ திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டின் வளர்ச்சிக்கும், சமுதாய முன்னேற்றத்திற்கும் தடைக் கற்களாகத் திகழ்கின்ற அதர்மம், அநீதி, சூழ்ச்சி, வன்மம் ஆகியவற்றை வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழித்து, நற் சிந்தனைகளும், நன்னெறிகளும் வெற்றி பெற எண்ணற்ற தியாகங்களும், அர்ப்பணிப்புகளும் தேவைப்படும். இறைத் தூதரின் தியாகங்களை மனதில் நிலை நிறுத்தி, மனித நேயம் தழைக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடுபடுவோம் என இந்த பக்ரீத் திருநாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.
இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடும் இந்த இனிய திருநாளில், உலகில் அன்பும், அமைதியும் தழைத்தோங்கிட, அனைவரும் மனித நேயத்துடனும், சகோதரத்துவத்துடனும், தியாகச் சிந்தனையுடனும் வாழ்ந்திட வேண்டும் என்று மனதார வாழ்த்தி, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும், எம்ஜிஆர், ஜெயலலிதாவின் நல்வழியில், எனது பக்ரீத் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்” என்று பழனிசாமி கூறியுள்ளார்.






