முதல்வரான பிறகு முதல் டெல்லி பயணம்… பிரதமரை சந்திக்கிறார் விஜய்!”

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று டெல்லி பயணம் மேற்கொள்கிறார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ளார். தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் கடந்த மே 10ஆம் தேதி பதவி ஏற்றார்.முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக அவர் டெல்லி பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இன்று காலை 10 மணி அளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, மரியாதை நிமித்தமாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை தொடர்ந்து சந்தித்து வாழ்த்து பெற்றார். குறிப்பாக, திமுக தலைவர் ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்புகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை பெற்றன.அதனைத் தொடர்ந்து, ஆட்சி மற்றும் நிர்வாகப் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வந்தார். பல்வேறு துறை அதிகாரிகளை சந்தித்து, பல கட்ட ஆலோசனைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்.இந்த சூழலில், பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று டெல்லி பயணம் மேற்கொள்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, தமிழ்நாடு அரசியல் இல்லத்திற்கு அவர் சென்று, அங்கு வழங்கப்பட இருக்கும் அரசு மரியாதையை ஏற்க உள்ளார்.அதனைத் தொடர்ந்து, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்கும் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிகழ்ச்சிகளை முடித்த பிறகு, மாலை 4.30 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பின்போது, தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு, புதிய திட்டங்களுக்கு மத்திய அரசின் ஒப்புதல், சமீபத்தில் கர்நாடக அரசு முன்னெடுத்து வரும் மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விரிவாக பேச உள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின்னர், முதலமைச்சர் விஜய் ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரையும் மரியாதை நிமித்தமாக சந்திக்க உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் உள்ள மூத்த அரசியல் தலைவர்களை சந்தித்த முதலமைச்சர் விஜய், டெல்லியில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளை முடித்த பின்னர், நாளை அகில இந்திய காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் சென்னை திரும்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.