தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைக்கத் தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைத் திரட்டுவதில் தீவிரமாக இறங்கியுள்ளது.இதன் ஒரு பகுதியாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஆதரவைக் கோரி தவெக-வின் முக்கிய நிர்வாகி அருண்ராஜ், அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீனை இன்று நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, தவெக ஆட்சி அமைக்கத் தங்களது கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என அவர் அதிகாரப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்தார்.
தவெக-வின் கோரிக்கையைத் திட்டவட்டமாக நிராகரித்த காதர் மொய்தீன், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்ன சொல்கிறாரோ அதைத்தான் தங்களது கட்சி பின்பற்றும் எனத் தெரிவித்துள்ளார். “திமுக தலைவர் சொன்னால் மட்டுமே தவெக-விற்கு எங்களால் ஆதரவு தர முடியும், அதுவரை ஆதரவு அளிக்க வாய்ப்பில்லை” என அவர் அருண்ராஜிடம் நேருக்கு நேராகவே கூறித் திருப்பி அனுப்பியுள்ளார். இந்த அதிரடி பதில் தவெக வட்டாரத்திலும், அக்கட்சியின் தலைவர் விஜய் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






