ஆந்திராவில் பல இடங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக வாகன ஓட்டிகள் வரிசையில் அணிவகுத்து காத்திருக்கின்றனர்.
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பற்றாக்குறை குறித்து தகவல் அறிந்த சிலர் கேன்களுடன் பெட்ரோல் நிலையங்களுக்கு வருகின்றனர். முன்பு தங்களது இருசக்கர வாகனங்களுக்கு ஒன்று அல்லது இரண்டு லிட்டர் பெட்ரோல் வாங்கி வந்தவர்கள் இப்போது வாகனத்தின் முழு டேங்க்கையும் நிரப்புகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் கிராமப்புறங்களிலிருந்து வந்து அதிகமாக வாங்கி தங்களுடன் எடுத்துச் செல்கின்றனர். பெட்ரோல், டிசலை நம்பி பிழைப்பு நடத்தும் ஆட்டோ டிரைவர்களுக்கு 5 லிட்டருக்கு மேல் கொடுப்பதில்லை. ஆனால் கார்களில் வருபவர்களுக்கு எவ்வளவு லிட்டர் வேண்டுமானாலும் கொடுப்பதாக ஆட்டோ டிரைவர்கள் புகார் கூறுகின்றனர். மேலும் பல இடங்களில், பல்வேறு வேலைகளுக்காக பல இடங்களுக்கு செல்லும் தொழிலாளர்களும் பெட்ரோல் நிலையங்களில் வரிசையில் நிற்கின்றனர்.
இந்நிலையில் கிராமப்புறங்களில் பல பகுதிகளில் தற்போது ரபி பருவ அறுவடை நடைபெற்று வருகிறது. தங்களது நெல் அறுவடைக்கு வந்துவிட்டதால் பெருமகிழ்ச்சியில் இருக்கும் விவசாயிகள், டீசல் தட்டுப்பாடு காரணமாக தங்களது நெல் அறுவடை இயந்திரங்களை வரவழைப்பதில் சிரமப்படுகின்றனர். இதனால் பல கிராமங்களில் ஆயிரகணக்கான ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல இடங்களில் வயல்களில் நெல் அறுவடை இயந்திரங்கள் நின்றுவிட்டதால் விவசாயிகள் கேன்களுடன் அந்தந்த பெட்ரோல் பங்க் அருகே காத்திருக்கின்றனர்.







