ரேஷன் அரிசியும் வேண்டாம், காய்கறிகளும் வேண்டாம்” ; தடாகத்தில் இட்லி, பேக்கரி கடைக்கு உணவு தேடி உலா வந்த ஒற்றைக் காட்டு யானை – சி.சி.டி.வி காட்சிகள் வைரல்!
கோவை, தடாகம் பகுதி கிராமங்களில் ரேஷன் அரிசி, காய்கறிகள் மற்றும் தென்னங் குருத்துக்களைத் தின்று அலுத்துப் போன காட்டு யானை ஒன்று, புதுவிதமான உணவுகளை ருசிப்பதற்காகப் பேக்கரி மற்றும் இட்லி கடைகளில் உகுந்த உலா வந்த காட்டு யானையால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை, தடாகம் பள்ளத்தாக்கு மற்றும் அதன் சுற்றி உள்ள கிராமப் பகுதிகளில் ஒற்றை யானை ஒன்று தொடர்ந்து உலா வந்து வருகிறது. வழக்கமாக விளைநிலங்களில் உள்ள கரும்பு, வாழைத் தண்டு, மாங்காய், தென்னங் குருத்து, முருங்கை, பூசணிக்காய் மற்றும் வீடுகளில் சேமித்து வைக்கப்பட்டு உள்ள ரேஷன் அரிசி, தவிடு, புண்ணாக்கு போன்றவற்றைத் தேடி வந்து தின்று சேதப்படுத்துவது வாடிக்கையாக இருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கமான உணவுகளைத் தின்று சலிப்படைந்த அந்த யானை, தன் ‘நாக்கு ருசியை’ மாற்ற முடிவு செய்து நேற்று நள்ளிரவு கிராமப் பகுதிக்குள் நுழைந்தது.
அங்குச் செயல்பட்டு வரும் பேக்கரி மற்றும் இட்லி கடை வாசலுக்கு வந்த யானை, அந்தக் கடைகள் அமைந்து உள்ள வளாகத்திற்குள் புகுந்து உணவைத் தேடியது.
நாளுக்கு நாள் இந்த யானையின் உணவுத் தேவை மாறிக்கொண்டே போவதும், தற்போது கடைகளை நோக்கி உலா வர தொடங்கியது வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஊருக்குள் நுழையும் இந்த யானையைக் உடனடியாக வனப்பகுதிக்குள் விரட்டவும், இரவு நேரங்களில் தீவிர ரோந்துப் பணிகளை மேற்கொள்ளவும் வனத்துறை அதிகாரிகளுக்குத் தடாகம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.






