15 புதிய நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 5 நிரந்தர நீதிபதிகள் மற்றும் 10 கூடுதல் நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி நேற்று உயர் நீதிமன்ற கலையரங்கில் நடைபெற்ற விழாவில் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 பேரை நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. இதில் 8 வழக்கறிஞர்கள், 7 மாவட்ட நீதிபதிகள் என மொத்தம் 15 பேரை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடந்த 7-ம் தேதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து புதிய நீதிபதிகள் பதவியேற்பு விழா, உயர் நீதிமன்ற கலையரங்கில் நேற்று நடந்தது.

புதிய நீதிபதிகள் 15 பேருக்கும் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி தனித்தனியாக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்வில், சென்னை உயர் நீதிமன்ற இந்நாள் மற்றும் முன்னாள் நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள், புதிய நீதிபதிகளின் குடும்பத்தினர், வழக்கறிஞர்கள், நீதித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் திரளாக பங்கேற்றனர்.

நீதிபதி கே.கோவிந்தராஜன்: உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசின் துணை சொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகித்த இவர். 1972 மார்ச் 8 ம் தேதி குளித்தலையில் பிறந்தவர். 1994-ல் வழக்கறிஞராக பதிவு செய்த இவர், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராக நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர்.

நீதிபதி ரஜ்னிஷ் பதியால்: அமலாக்கத்துறை சிறப்பு அரசு வழக்கறிஞராக பதவி வகித்த இவர், 1973 பிப்.28 அன்று பிறந்தவர். 1996-ம் ஆண்டு சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முதுநிலை சட்டம் படித்துள்ளார்.

நீதிபதி என்.ரமேஷ்: அமலாக்கத்துறை சிறப்பு அரசு வழக்கறிஞராக பணியாற்றிய இவர், 1973-ம் ஆண்டு பிறந்தவர். முதல் தலைமுறை வழக்கறிஞர். 1997-ம் ஆண்டு வழக்கறிஞராக பார் கவுன்சிலில் பதிவு செய்தார். வணிகச் சட்டத்தில் முதுகலை சட்டம் படித்துள்ளார். 2003 டிசம்பரில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில நீதித்துறை தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாக சிவில்நீதிபதியாக பணியாற்றிய அனுபவமிக்கவர். தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு 2009 முதல் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார்.

நீதிபதி ஜி.கே.முத்துக்குமார்: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையத்தைச் சேர்ந்த இவர், 2020-21 காலகட்டங்களில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞராக பணியாற்றியவர். 1974-ம் ஆண்டு அக்டோபரில் பிறந்தார். பெங்களூரு பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக பதிவு செயதார். திருப்பதி லட்டு, ஈரோடு மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுக்கொடுத்துள்ளார்.

நீதிபதி ஆர்.ராஜேஷ் விவேகானந்தன்: மத்திய அரசின் துணை சொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகித்த இவர், 1975-ம் ஆண்டு ஜன.3-ல் பிறந்தவர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாண்டவன்காடு பகுதியைச் சேர்ந்தவர். மதுரை சட்டக்கல்லூரியில் படிப்பை முடித்து 1998-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்தார். தொல்லியல்துறை, ஹோமியோபதி தேசிய ஆணையம் உள்ளிட்ட மத்திய அரசு துறைகளில் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார்.

நீதிபதி எஸ்.ரவீக்குமார்: புதுச்சேரி அரசின் மாநில அரசு வழக்கறிஞராக பணியாற்றிய இவர், 1977 டிச.23-ல் சென்னையில் பிறந்தவர். கோவை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து 2000-ல் வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் புதுச்சேரி அரசு சார்பில் ஏராளமான வழக்குகளில் ஆஜராகியுள்ளார்.

நீதிபதி என்.திலீப்குமார்: வருமான வரித்துறை, சுங்கத்துறை, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் என மத்திய அரசு வழக்கறிஞராக பணியாற்றிய இவர், 1980 மார்ச் 22-ல் பிறந்தவர். சிவகாசியை சேர்ந்த இவரது தந்தை நாகராஜன் தொழிலதிபராக உள்ளார். தாயார் அமுதா. சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்து 2002-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்து மத்திய அரசுக்காக பல்வேறு வழக்குகளில் ஆஜராகியுள்ளார்.

நீதிபதி இ.மனோகரன்: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு அரசு வழக்கறிஞராகவும், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திலும் பணியாற்றிய இவர், 1978 அக்.27-ல் பிறந்தவர்.சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பையும், சிங்கப்பூரில் முதுகலை படிப்பையும் முடித்து 2003-ம் ஆண்டு முதல் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

நீதிபதி டாக்டர் பி.முருகன்: மாவட்ட முதன்மை நீதிபதியாக பணியாற்றி வரும் இவர், 1974 மே 20-ம் தேதி பிறந்தவர். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர். சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து 1997-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்தார். சென்னையில் முதுகலை படிப்பை முடித்து சமூகவியல், தத்துவயியல் மனித உரிமைகள் என 10-க்கும் மேற்பட்ட முதுகலை பட்டங்களையும், அரசியலமைப்பு சட்டத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

நீதிபதி எம்.டி.சுமதி: திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் திருச்சி சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராகி பின்னர் நீதிபதியாக தேர்வானார். சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றம், தேனி மகளிர் நீதிமன்றம், ராமநாதபுரம், அரியலூர், புதுச்சேரி என பல்வேறு இடங்களில் நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.

நீதிபதி எஸ்.அல்லி: சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமைப் பதிவாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், 1966 ஜூன் 11-ல் சீர்காழி தாலுகா வடரங்கத்தில் பிறந்தவர். திருச்சி சட்டக்கல்லூரியில் படிப்பை முடித்து, வழக்கறிஞராக பார் கவுன்சிலில் பதிவு செய்தார். சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.

நீதிபதி சி. திருமகள்: வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் பள்ளிப்படிப்பை வேலூரிலும், சட்டப்படிப்பை சென்னையிலும் முடித்து வழக்கறிஞராக பதிவு செய்தார். மதுரை, அம்பத்தூர், சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிபதியாகவும், சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்ற நீதிபதியாகவும் கடலூர் மகளிர் நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.

நீதிபதி எஸ்.கார்த்திகேயன்: கடந்த 2024-ம் ஆண்டு முதல் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக பணியாற்றி வரும் இவர், சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் பிறந்தவர். சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் 5 ஆண்டு சட்டப்படிப்பை முடித்தவர். 2021 ஏப்ரல் முதல் 2022 டிசம்பர் வரை புதுச்சேரி அரசின் சட்டத்துறை செயலராக பணியாற்றியுள்ளார்.

நீதிபதி பி.முருகேசன்: சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முதன்மை நீதிபதியாக பணியாற்றி வரும் இவர், 1970-ம் ஆண்டு ஏப்.3-ல் பிறந்தவர். திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்தவர். மதுரை சட்டக்கல்லூரியில் படிப்பை முடித்த இவர் வழக்கறிஞராக திண்டுக்கல்லில் பணியாற்றி வந்தார்.

நீதிபதி என்.குணசேகரன்: திருப்பூர், திருச்சி, நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக பணியாற்றிய இவர், 1976 பிப்.1-ல் கோவையில் பிறந்தவர். கோவை சட்டக்கல்லூரியில் சட்டம் படித்து 2002-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்தார். பல்வேறு மாவட்டங்களில் நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.பி.முருகேசன், என்.குணசேகரன்