திருச்செந்தூர் முருகன் கோயிலில் விஜய் விஸ்வரூப தரிசனம்.!

மிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் பிரசாரப் பணிகளை முடித்துவிட்டு கடந்த நான்கு நாட்களாக வீட்டில் ஓய்வெடுத்து வந்த அவர், நேற்று நள்ளிரவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். வழக்கமான வெள்ளைச் சட்டை மற்றும் காக்கி பேண்ட் உடைக்கு பதிலாக, பாரம்பரியமான பட்டு வேட்டி சட்டையில் அவர் வருகை தந்தது அங்கிருந்த தொண்டர்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் வரவேற்பையும் பெற்றது.

மதுரை விமான நிலையத்தில் விஜய் வருகை தரப்போகிறார் என்ற தகவல் பரவியதுமே, நள்ளிரவு என்றும் பாராமல் தவெக நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் பெருந்திரளாகக் குவிந்தனர். விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த விஜய்யைக் கண்டதும் உற்சாகமடைந்த ரசிகர்கள், முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பரித்தனர். கூட்ட நெரிசலுக்கு மத்தியிலும், விஜய் தனது காரின் பக்கவாட்டில் ஏறி நின்று கொண்டு தொண்டர்களை நோக்கி கைகளை அசைத்து தனது அன்பை வெளிப்படுத்தினார்.

ரசிகர்கள் அவர் சென்ற காரின் மீது பூக்களைத் தூவி தங்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். மிக அதிக அளவில் கூட்டம் காணப்பட்டதால், விஜய்யின் கார் விமான நிலையத்தை விட்டுப் புறப்படுவதில் சிறிது தாமதம் ஏற்பட்டது. பின்னர் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் கூட்டத்தைச் சீர்செய்து வழி ஏற்படுத்திக் கொடுத்ததையடுத்து, அவர் மதுரையில் இருந்து சாலை மார்க்கமாகத் திருச்செந்தூர் நோக்கிப் புறப்பட்டார்.

விஜய்யின் இந்தத் திருச்செந்தூர் பயணம் அரசியல் வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருக்கும் வேளையில், முருகப்பெருமானை வழிபட அவர் பட்டு வேட்டி சட்டையில் மதுரை வழியாகப் பயணம் மேற்கொண்டது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அசம்பாவிதங்கள் தவிர்க்கும் பொருட்டு, அவர் செல்லும் வழியெங்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் சென்ற அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. அதிகாலை நேரத்தில் அவர் விஸ்வரூப தரிசனம் செய்து வழிபட்டார். இந்த தரிசனம் மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.

விஸ்வரூப தரிசனம் என்பது அதிகாலை நேரத்தில் நடைபெறும் சிறப்பு வழிபாடு ஆகும். இதில் இறைவன் முந்தைய நாள் அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இதனை தரிசிப்பதால் மன அமைதி, நேர்மறை எண்ணங்கள் மற்றும் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

விஜயின் வருகையையொட்டி கோயில் வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதிகாலை முதலே ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.வாக்கு எண்ணிக்கைக்கு முன் இந்த தரிசனம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்தலில் வெற்றி பெற வேண்டி அவர் இந்த ஆன்மிகப் பயணத்தை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இது அவரது அரசியல் முடிவுகளிலும் தாக்கம் ஏற்படுத்தும் என சிலர் கருதுகின்றனர்.தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கி பல்வேறு கட்சி தலைவர்கள் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் விஜய் ஆன்மிகத்தைத் தேர்வு செய்திருப்பது அவரின் தனித்துவமான அணுகுமுறையை காட்டுகிறது. இது அவரது ஆதரவாளர்களிடையே மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மொத்தத்தில், வாக்கு எண்ணிக்கைக்கு முன் திருச்செந்தூரில் நடைபெற்ற இந்த தரிசனம், அரசியல் மற்றும் ஆன்மிகம் இணைந்த முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.