சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு ரத்து

த்திய கிழக்கு நாடுகளில் நிலவும் தற்போதைய பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு, மார்ச் மற்றும் ஏப்ரல் 2026-ல் நடைபெறவிருந்த சி.பி.எஸ்.இ (CBSE) மற்றும் சி.ஐ.எஸ்.சி.இ (CISCE) +2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 15 அன்று சி.பி.எஸ்.இ தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் சன்யம் பரத்வாஜ் வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, மார்ச் 16 முதல் ஏப்.10, 2026 வரை நடைபெறவிருந்த அனைத்து பிளஸ் 2 தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பஹ்ரைன், ஈரான், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 7 நாடுகளில் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தும். மார்ச் 16 முதல் ஏப்ரல் 10 வரை திட்டமிடப்பட்டிருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. ஏற்கனவே மார்ச் 1, 3, 5, 7, 9 தேதிகளில் ஒத்திவைக்கப்பட்டிருந்த தேர்வுகளும் தற்போது முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் முறை குறித்து பின்னர் தனியாக அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல்கள் சம்பந்தப்பட்ட நாடுகளின் இந்தியத் தூதரகங்களுக்கும், துபாயில் உள்ள சிபிஎஸ்இ மண்டல அலுவலகத்திற்கும் முறைப்படி அனுப்பப்பட்டுள்ளன.

இதேபோல், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து மையங்களிலும் நடைபெறவிருந்த ஐசிஎஸ்இ (ICSE – 10-ஆம் வகுப்பு) மற்றும் ஐஎஸ்சி (ISC – 12ம் வகுப்பு) தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக சிஐஎஸ்சிஇ வாரியம் அறிவித்துள்ளது. சி.ஐ.எஸ்.சி.இ செயலர் டாக்டர் ஜோசப் இம்மானுவேல் இதுகுறித்து கூறுகையில், இந்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மாற்று மதிப்பீட்டு முறையின் (Alternative Assessment Method) அடிப்படையில் கணக்கிடப்படும். இதற்கான விரிவான நடைமுறைகள் விரைவில் பகிரப்படும். ரத்து செய்யப்பட்ட தேர்வுகளின் முடிவுகள், இந்தியாவில் உள்ள மாணவர்களின் முடிவுகளுடன் சேர்த்தே வெளியிடப்படும் என்று உறுதிப்படுத்தி உள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பாதுகாப்பு சூழலை ஆய்வு செய்த பிறகே இந்தத் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஐக்கிய அரபு அமீரகம் மார்ச் 9 முதல் மார்ச் 22 வரை பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு முன்கூட்டியே வசந்தகால விடுமுறையை (Spring Break) அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.