புஞ்சை புளியம்பட்டியில் 7-வது ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி 2023 – கோப்பை அறிமுக விழா

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்  7-வது ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி 2023- ஆம் ஆண்டின் கோப்பை அறிமுக விழா கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. முன்னதாக 7 -வது ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி 2023- ஆம் ஆண்டின் கோப்பையினை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் துவங்கி, நகரின் முக்கிய சாலைகளின் வழியாக புஞ்சை புளியம்பட்டி, அரசு மேல்நிலைப்பள்ளியினை ஊர்வலமாக வந்தடைந்தது.
இதைத்தொடர்ந்து பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அறிமுக விழாவில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பேசியதாவது.
 தமிழ்நாடு முதலமைச்சர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். ஹாக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், இணைந்து நடத்தும் ஆசியக் கோப்பைக்கான ஆண்கள் ஹாக்கி போட்டிகள் வருகின்ற (03.08.2023) முதல் (12.08.2023) வரை சென்னையில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, ஜப்பான், சீனா, மலேசியா நாடுகளை சேர்ந்த ஹாக்கி அணிகள் பங்கு பெறுகிறது. இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் பரிசுக்கோப்பை தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்கள் தோறும் எடுத்துச் சென்று பொதுமக்கள் பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், இந்த நிகழ்ச்சியை( 20.07.2023) அன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் துவக்கி வைத்தார். ஒவ்வொரு மாவட்டங்கள் தோறும் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி,   ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கோப்பை
அறிமுக விழா நடைபெற்று வருகிறது. மேலும், 7-வது ஆசிய சாம்பியன்ஸ் ஆடவர் ஹாக்கி போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் இந்தியா அணியில் நமது தமிழ்நாடு அரியலூர் மாவட்டத்தை சார்ந்த னகார்த்தி  கலந்து கொள்ள உள்ளார்கள் என்பது கூடுதல் சிறப்பாகும்.  இந்த ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்துள்ளது.
மேலும், மாணவர்கள் படிப்பதுடன் விளையாட்டிலும் கவனம் செலுத்தினால் உடலும் ஆரோக்கியம் பெற்று போட்டிகளில் கலந்து கொண்டு மாணவ, மாணவியர்கள் நமது மாவட்டத்திற்கும், நமது மாநிலத்திற்கும் மற்றும் நமது இந்தியாவிற்கும் பெருமை தேடி தர வேண்டுமெனவும் தெரிவித்தார்.
இந்த விழாவில் சத்தியமங்கலம் ஏஎஸ்பி அய்மன்ஜமால், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சதீஷ்குமார், சத்தியமங்கலம் தாசில்தார் சங்கர்கணேஷ், புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி தலைவர் ஜனார்தனன், துணைத்தலைவர் பி.ஏ.சிதம்பரம், கமிஷனர் (பொ) செல்வம் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்..