மறைந்த முன்னாள் முதல்வரின் மகன் உட்பட 7 புதிய அமைச்சர்களாக இமாச்சலத்தில் பதவியேற்பு..!

சிம்லா: இமாச்சல பிரதேச அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் மூலம் அமைச்சரவையின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேச சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. இதையடுத்து கடந்த டிசம்பர் 11ம் தேதி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுக்விந்தர் சிங் சுக்கு முதல்வராகவும், முகேஷ் அக்னிஹோத்ரி துணைமுதல்வராகவும் பதவி ஏற்று கொண்டனர்.

இமாச்சல பிரதேசத்தில் முதல்வர், துணை முதல்வர் உட்பட மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை 12-ஐ தாண்டக் கூடாது என்பதால், அமைச்சர் பதவிக்கான 10 பேரின் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டு காங்கிரஸ் மேலிடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், 28 நாட்களுக்கு பிறகு இமாச்சல பிரதேச அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. சிம்லா ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் நடந்த பதவி ஏற்பு விழாவில், முதல்வர், துணைமுதல்வர் முன்னிலையில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் 7 புதிய அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதில் கேபினட் அமைச்சராக பதவி ஏற்றுள்ள விக்ரமாதித்ய சிங், இமாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் மறைந்த வீரபத்ர சிங்கின் மகன். அமைச்சர்களுக்கான இலாகாக்கள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.