அந்தமான் – நிக்கோபார் தீவுகளின் ஸ்ரீ விஜயபுரத்தில் இருந்து, 150 கி.மீ., தொலைவில் உள்ள பாரன் தீவு அருகே, கடந்த 24-ல், சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித்திரிந்த மீன்பிடி படகில், கடலோர காவல் படையினர் மற்றும் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.
அந்த சோதனையின் போது 5,500 கிலோ எடையுள்ள, போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், படகில் இருந்த அண்டை நாடான மியான்மரைச் சேர்ந்த ஆறு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சேட்டிலைட் போன் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.
போதைப்பொருளுடன் பிடிபட்ட கடத்தல்காரர்கள்போதைப்பொருள் கடத்திய இலங்கை படகுஇந்நிலையில் நேற்று இந்திய அரபிக் கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக இலங்கை கடற்படையினர் இந்திய கடற்படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கன்னியாகுமரி பகுதியில் உள்ள அரபிக் கடல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் இந்திய கடற்படையினர் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் அப்பகுதியில் விரைந்து சென்ற இலங்கை படகினை இந்திய கடற்படையினர் விரட்டி பிடித்தனர்.
அந்த படகினை சோதனை செய்த போது அதில் சுமார் 500 கிலோ மெத்த போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அதனை பறிமுதல் செய்த இந்திய கடற்படையினர், போதைப்பொருள் மற்றும் இலங்கை படகில் இருந்த 7 இலங்கையர்கள் மற்றும் 2 இந்தியர்களையும் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைத்தனர். போதைப்பொருள் கடத்தல்காரர்களை தங்களது முகாமிற்கு கொண்டுசென்ற இலங்கை கடற்படையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே போதைப்பொருள் எங்கிருந்து யார் மூலம் இந்திய கடல் பகுதியில் கடத்தி வரப்பட்டது என்பது குறித்து மத்திய மாநில புலனாய்வு அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.