நாளை நாடு திரும்புகிறார் அண்ணாமலை… சூடுபிடிக்க போகுது தமிழக அரசியல் களம்..!!

ரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவர், சின்னதாராபுரத்தில் உள்ள சொக்கம்பட்டி கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.

கோவையில் பட்டப்படிப்பை முடித்து உயர் கல்விக்காக எம்.பி.ஏ படிக்க லக்னோவுக்குச் சென்றார். அங்குள்ள மக்களின் வாழ்நிலையைப் பார்த்து ஐபிஎஸ் படித்து சேவையாற்ற வேண்டும் என சிவில் தேர்வு எழுதினார். கடந்த 2011இல் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று கர்நாடக மாநில கேடரானார்.

அங்கு பயிற்சி எஸ்.பி.யாக பணியைத் தொடங்கிய அவர், தனது பணிக் காலத்தில் கர்நாடகா தாண்டி தமிழ்நாட்டிலும் பிரபலமானார். சீனியர் எஸ்.பி.யாகப் பதவியில் இருந்தபோது 2019இல் ஐபிஎஸ் பதவியில் இருந்து விலகினார். பின்னர், சிறிதுகாலம் ஒரு அமைப்பைத் தொடங்கி நடத்தி வந்த அவர், ரஜினி கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரஜினி கட்சி தொடங்கும் முடிவைக் கைவிட்ட நிலையில், 2020 ஆகஸ்ட் மாதம் பாஜகவில் இணைந்தார்.

கட்சியில் இணைந்த அண்ணாமலைக்கு ஓராண்டிற்குள் தமிழக பாஜக தலைவர் பதவி வழங்கப்பட்டது. பதவிக்கு வந்த ஓராண்டிலேயே நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் தனித்துப் போட்டியிட்ட பாஜக, 5% வாக்குகளைப் பெற்று கவனம் பெற்றது. 2022-இல் பாஜக தனித்துப் போட்டியிட்டு சென்னையில் ஒரு மாமன்ற உறுப்பினரைப் பெற்றது. இதற்கிடையே, திமுக எதிா்ப்பு அரசியலை தீவிரமாகக் கையிலெடுத்தார் அண்ணாமலை.

‘என் மண் என் மக்கள்’ எனும் நடைப்பயணத்தை மாநிலம் முழுவதும் மேற்கொண்டாா். இதற்கிடையே, அண்ணா, ஜெயலலிதா ஆகியோரை அண்ணாமலை விமா்சித்த நிலையில், அதிமுக-பாஜக கூட்டணி முறிந்தது. 2024 மக்களவைத் தோ்தலில் பாஜக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டது. 23 தொகுதிகளில் தாமரை சின்னத்தை முன்னிறுத்தி போட்டியிட்ட நிலையில், அந்தக் கட்சியின் வாக்கு விகிதம், தமிழக தோ்தல் வரலாற்றிலேயே முதல்முறையாக 11.2%-ஆக உயா்ந்தது.

இந்நிலையில், அண்ணாமலை மேல்படிப்புக்காக லண்டனுக்கு சென்ற பிறகும், அவரது இடத்திற்கு வேறொருவரை நியமிக்கவில்லை. இதுவே அண்ணாமலைக்கு தலைமை கொடுக்கும் முக்கியத்துவத்தின் வெளிப்பாடாகப் பாா்க்கப்பட்டது. அண்ணாமலையின் செயல்பாடுகளும் தனித்துப் போட்டியிட்டு அதிமுகவின் தோல்விக்கு பாஜக காரணமானதும் பாஜக – அதிமுக இடையே கடுமையான பிளவை ஏற்படுத்திவிட்டது.

வட சென்னையில் வெள்ளம் வந்த நேரத்தில் கூட பாஜகவால் தீவிரமாக களத்தில் இறங்கிப் பணியாற்ற முடியவில்லை. அதேபோல, பாஜகவுக்கு கட்சி மேலிடம் கொடுத்த முக்கியப் பொறுப்பான உறுப்பினா் சோ்க்கையிலும் இலக்கை எட்ட முடியவில்லை. இதற்கிடையே, விஜயின் அரசியல் வருகை, 2026 சட்டப்பேரவைத் தோ்தலை மையமாக வைத்து திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி தீவிரமாக செயல்பட்டு வருவது உள்ளிட்ட செயல்பாடுகளால் தமிழக அரசியல் களம் விறுவிறுப்பாக மாறியுள்ளது.

பாஜகவை விஜய் கடுமையாக விமா்சனம் செய்த பின்னரும், இதுவரை பாஜகவிடம் இருந்து சரியான எதிா்வினை வரவில்லை. தமிழக பாஜக மூத்த நிா்வாகிகளைப் பொறுத்தவரை திமுகவுக்கு எதிராக பெரிய கூட்டணியைக் கட்டமைத்தால் மட்டுமே அதை வீழ்த்த முடியும் என கூறி வருகின்றனர். ஆனால், அதற்கு அதிமுகவும் தயாராக இல்லை. அதை அண்ணாமலையும் விரும்பவில்லை. இந்நிலையில், அண்ணாமலை தமிழகத்துக்கு டிசம்பர் 1ஆம் தேதியான நாளை திரும்புகிறார்.

மக்களவைத் தோ்தல் என்பதால் பிரதமா் மோடியை முன்னிறுத்தி பாஜகவால் கணிசமான வாக்கு வங்கியைப் பெற முடிந்தது. நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் கட்சிகள் இளைஞா்களைக் குறிவைத்து தீவிர அரசியலை கையிலெடுத்துள்ளது. அண்ணாமலையைத் தவிா்த்துவிட்டு பாஜக இயங்க முடியுமா? என்பதும் கேள்விக்குறிதான். 2026இல் நடைபெறுவது சட்டப்பேரவைத் தேர்தல் என்பதால், அதிமுகவை தவிா்த்துவிட்டு பாஜகவால் தனி அணியாகச் செயல்பட முடியுமா? என்பதையும் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.