50 ஆண்டு எல்லை பிரச்சனை முடிவுக்கு வந்தது… அஸ்ஸாம்- மேகாலயா வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம்.!!

புதுடெல்லி: அஸ்ஸாம்- மேகாலயா இடையே 50 ஆண்டுகளாக நிலவி வரும் எல்லை பிரச்சினைக்கு தீர்வு காணும் வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தத்தில் முதல்வர்கள் ஹிமந்தா பிஸ்வா சர்மாவும், கான்ராட் சங்மாவும் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் கையெழுத்திட்டனர்.

வடகிழக்கு மாநிலங்களில் முக்கிய மாநிலமான அசாமுடன் அண்டை மாநிலங்களான, மேகாலயா, மிசோரம், நாகலாந்து ஆகியவை எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இதில் மிசோரமுடன் 164 கிலோ மீட்டர் எல்லையை அசாம் பகிர்ந்து வருகின்றது.

இதுதொடர்பாக இரு மாநில எல்லையில் மீண்டும் கடந்த ஆண்டு வன்முறை வெடித்தது. இரு மாநிலங்களைச் சேர்ந்த மக்களும், போலீஸாரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். துப்பாக்கிச் சூடும், கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டன. இந்த வன்முறைச் சம்பவத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 6 போலீஸார் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர்.

இதனால் இரு மாநிலங்கள் இடையே பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதுபோலவே அசாம் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட மேகாலயாவுடனும் எல்லை தொடர்பான சர்ச்சை 50 ஆண்டுகள் நீடித்து வருகிறது. இரு மாநில எல்லையோரம் அமைந்துள்ள 36 கிராமங்களை, மேகாலயா உரிமை கோரியது. எனினும், அதை ஏற்க அசாம் மறுத்தது.

பின், அதற்கு தீர்வு காண, இரு மாநில அமைச்சர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழு, எல்லையை வரையறுக்கும் பணிகளில் ஈடுபட்டது. சர்ச்சைக்குரிய எல்லை கிராமங்களுக்கு, இரு மாநில குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். உரிமை கோரப்பட்ட 36 கிராமங்களில், ஆறு கிராமங்களைத் தவிர, மீதமுள்ள 30 கிராமங்களும் மேகாலயா மாநிலத்தின் அங்கமாக இருக்க அந்த குழுவினர் ஒருமனதாக சம்மதம் தெரிவித்தனர்.

இரு மாநில எல்லை விவகாரத்தில் தீர்வு ஏற்படுவதற்கான வரைவு தீர்மானத்தை இரு மாநில முதல்வர்களும் கடந்த ஜனவரி மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின்னர் அதன்மீது ஆய்வு மற்றும் பரிசீலனை நடைபெற்றது.

இந்தநிலையில் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவும், மேகாலயா முதல்வர் கான்ராட் கே சங்மாவும் ஆகிய இருவரும் 50 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள எல்லைப் பிரச்சனையை தீர்க்கும் ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டனர். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன்படி, இரு மாநிலங்களுக்கு இடையில் தகராறு உள்ள 36.79 சதுர கி.மீ. நிலப்பகுதியில் அசாமிற்கு 18.51 சதுர கி.மீ. நிலப்பகுதியும், மேகாலயாவுக்கு 18.28 சதுர கி.மீ. நிலப்பகுதியும் பிரித்து எடுத்து கொள்ளப்படும். இதனால் 50 ஆண்டுகளாக இரு மாநிலங்களுக்கு இடையே தீர்க்கப்படாமல் இருந்த எல்லை பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.