ஆ.ராசாபயணம் திடீர் ரத்து.. முதல்வருக்கு போன ‘உளவுத்துறை ரிப்போர்ட் – ஸ்டாலின் போட்ட உத்தரவு..!!

சென்னை : திமுக எம்.பி ஆ.ராசா தனது நீலகிரி பயணத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலினின் உத்தரவை அடுத்து திடீரென ரத்து செய்துள்ளார்.

திமுக எம்.பி ஆ.ராசா இன்று கோவை வழியாக நீலகிரி செல்வதாக இருந்தது. ஆ.ராசாவின் சமீபத்திய பேச்சுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு எதிராக கோவையில் போராட்டம் நடத்த பாஜகவினர் தயாராகி வந்தனர்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் பெட்ரோல் குண்டு வீச்சுகளால் பதற்றம் அதிகரித்திருப்பது பற்றியும், ஆ.ராசா பேச்சால் பாஜகவினர் மத்தியில் எழுந்துள்ள கொந்தளிப்பு குறித்தும் உளவுத்துறையினர் முதல்வர் ஸ்டாலினுக்கு ரிப்போர்ட் அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து, இப்போது நீலகிரி பயணம் வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின், ஆ.ராசாவுக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தனது பயணத்தை ரத்து செய்துள்ளார் ஆ.ராசா

சமீபத்தில் சென்னையில் நடந்த திராவிடர் கழக நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய திமுக எம்பி ஆ.ராசா, “இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன் தான், இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சமன் தான். இந்துவாக இருக்கும் வரை தீண்டத்தகாதவன் தான். சூத்திரன் என்றால் விபச்சாரியின் மகன் என்று இந்து மதம் சொல்கிறது. இன்னும் எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார். ஆ.ராசாவின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இந்து மதம் குறித்து இழிவாகப் பேசிய ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவினர் மற்றும் இந்துத்வா அமைப்பினர் கூறி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாஜகவினர், இந்து முன்னணியினர் ஆ.ராசாவின் பேச்சைக் கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்துத்வா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆ.ராசாவுக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். பாஜக கோவை மாவட்ட தலைவர் ஆ.ராசாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததால் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சமீபத்தில் இந்து மக்கள் புரட்சிப்படை என்ற அமைப்பின் மாநில செயலாளர் கண்ணன், இந்துக்களை இழிவாகப் பேசிய ஆ.ராசாவின் நாக்கை அறுத்துக்கொண்டு வந்தால் ரூ.1 கோடி ரொக்கமும், 1 ஏக்கர் நிலமும் பரிசாக வழங்கப்படும் என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார்.

குறிப்பாக, கோவை பகுதியில் பாஜகவினர் ஆ.ராசாவின் பேச்சைக் கண்டித்து தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில், ஆ.ராசா பேச்சைக் கண்டித்தும், திமுக அரசைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கிடையே, தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களும் நடந்து வருவது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இந்த பரபரப்பான சூழலில், திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி தனது தொகுதியான நீலகிரிக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார். அதன்படி இன்று பிற்பகல் சென்னையில் இருந்து கோவை விமான நிலையம் சென்று, அங்கிருந்து கார் மூலம் அன்னூர் வழியாக நீலகிரிக்குச் செல்வதாகத் திட்டமிட்டிருந்தார். ஆ.ராசாவுக்கு கோவையில் திமுகவினர் மற்றும் திராவிடர் கழகத்தினர் சிறப்பான வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளில் இறங்கியிருந்தனர்.

அதே நேரம் ஆ.ராசா கோவை வருவதையொட்டி, பாஜகவினர் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தத் திட்டமிட்டனர். பாஜகவினர் தங்கள் வாட்ஸ்-அப் குழுக்களில், ஆ.ராசாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்திற்கு வருமாறும், கோவையில் தொடங்கி நீலகிரி செல்லும் வரை பல இடங்களில் போராட்டம் நடத்தவேண்டும் என்று அழைப்பு விடுத்ததாகவும் தகவல் வெளியானது. பாஜக நிர்வாகிகளும், ஆ.ராசாவுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், ஆ.ராசாவுக்கு எதிராக பாஜக மற்றும் இந்துத்வா அமைப்புகள் போராட்டங்களுக்குத் திட்டமிட்டு வருவது பற்றிய அவசர ரிப்போர்ட் உளவுத்துறை மூலம் முதல்வர் ஸ்டாலினுக்குச் சென்றுள்ளது. மேலும், கடந்த சில நாட்களாக கோவை உட்பட தமிழகம் முழுவதும் நிலவி வரும் பதற்றமான சூழல் பற்றியும், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் பற்றியும் உளவுத்துறை அவசர அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளது.

இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின், ஆ.ராசாவை அழைத்து இப்போது நீலகிரி செல்ல வேண்டாம், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக ரிப்போர்ட் வந்திருக்கிறது எனக் கூறியுள்ளார். முதல்வர் அறிவுரையை ஏற்ற ஆ.ராசா, தனது நீலகிரி பயணத் திட்டத்தை கேன்சல் செய்துள்ளார். இந்த தகவலை கோவை, நீலகிரி மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கும் உடனடியாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ஆ.ராசாவை வரவேற்பதற்காக மேற்கொண்டு வந்த ஏற்பாடுகளை திமுகவினர் கைவிட்டுள்ளனர். ஆ.ராசாவிற்கான வரவேற்புப் பணிகளில் ஈடுபட்டு வந்த திமுக மாநகர் மாவட்ட செயலாளரான முன்னாள் எம்.எல்.ஏ நா.கார்த்திக், ஆ.ராசாவின் கோவை வருகை தவிர்க்க இயலாத காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது என்றும், தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே, மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரில் பாஜகவின செருப்பு வீசிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், அதுபோன்ற சூழலைத் தவிர்க்கவே முதல்வர் ஸ்டாலின், ஆ.ராசாவை இப்போது நீலகிரி செல்ல வேண்டாம் எனக் கூறியதாக திமுக தரப்பில் கூறப்படுகிறது. நேற்று கூட முதல்வர் ஸ்டாலின், “திமுக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் தீய நோக்கத்தோடு சொல சக்திகள் செயல்பட்டு வருகின்றன, அந்த நச்சு சக்திகளின் சதித் திட்டங்களுக்கு எவ்வகையிலும் நாம் இடம் கொடுக்கக்கூடாது” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.