விரைவில் வருகிறது படுக்கை வசதியுடன் கூடிய 42 வந்தே பாரத் ரயில்கள்..!

சென்னை: நீண்ட தூரம் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களை படுக்கை வசதி கொண்டதாக தயாரிக்க திட்டமிட்டுள்ளோம்.

அதன்படி, சென்னை ஐசிஎஃப் நிறுவனத்தில் படுக்கை வசதி கொண்ட 42 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படும் என்று ரயில்வே அதிகாரி தெரிவித்தார். சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ரூ.97 கோடியில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியா முழுவதும் 75 நகரங்களை இணைக்கும் வகையில் ‘வந்தே பாரத்’ ரயில் திட்டம் இயங்கி வருகிறது.

டெல்லி – வாரணாசி, டெல்லி – காத்ரா, குஜராத் மாநிலம் காந்திநகர் – மும்பை, அம்ப் அண்டவ்ரா – புதுடெல்லி, மைசூரு – சென்னை உட்பட சில ‘வந்தே பாரத்’ ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. தற்போது 7 வது வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்பட்டு, ஹவுரா – நியூ ஜல்பைகுரி இடையே ரயில் சேவை தொடங்கியுள்ளது. 8 வது வந்தே பாரத் ரயில் தயாரிக்கும் பணி ஐசிஎஃப்பில் நடந்து வருகிறது. இதற்கிடையே, சென்னை ஐசிஎஃப்பில் தலா 16 பெட்டிகள் கொண்ட தூங்கும் வசதியுள்ள வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து ரயில்வே அதிகாரி கூறியதாவது: தற்போதுள்ள வந்தே பாரத் ரயிலில் அமர்ந்து மட்டுமே பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இனி, நீண்ட தூரம் செல்லும் வந்தே பாரத் ரயில்கள் தூங்கும் வசதி கொண்டவையாக தயாரிக்கப்படும். மொத்தம் 117 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க ஐசிஎஃப் ஆர்டர் பெற்றுள்ளது. இதில் 75 ரயில்கள் இருக்கை வசதியுடன் தயாரிக்கப்படும். மற்ற 42 ரயில்களில் தூங்கும் வசதி இருக்கும். வந்தே பாரத் ரயிலில் 11 மூன்று அடுக்கு ஏசி பெட்டிகள், 4 இரண்டு அடுக்கு ஏசி பெட்டிகள், ஒரு முதல் வகுப்பு ஏசி பெட்டி என மொத்தம் 16 பெட்டிகள் இருக்கும். ஒரு மூன்று அடுக்கு ஏசி பெட்டியில் 61 படுக்கைகள், 2 அடுக்கு ஏசி பெட்டியில் 48 படுக்கைகள், ஒரு முதல் வகுப்பு ஏசி பெட்டியில் 24 படுக்கை வசதிகள் இருக்கும். ஒரு ரயிலில் 887 பேர் பயணிக்கலாம். இதுதவிர, ஒவ்வொரு பெட்டியிலும் மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர் ஒருவருக்கு ஒரு இடம் ஒதுக்கப்படும்.

மேலும், தூங்கும் வசதி கொண்ட ‘வந்தே பாரத்’ ரயில்களை தயாரிப்பதற்காக 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் டெண்டர் கோரப்படும். புதிய ‘வந்தே பாரத்’ ரயில்களை சென்னை ஐசிஎஃப் மற்றும் மகாராஷ்டிர மாநிலம் லத்தூரில் உள்ள மராத்வாடா தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும். வந்தே பாரத் ரயில்கள், சவுகரியமான பயணத்திற்கான 3ம் குறியீட்டளவில் தயாரிக்கப்படுகின்றன. இதனால், பயணிகளுக்கு சாதாரண ரயிலில் பயணிக்கும்போது ஏற்படும் அதிர்வுகள் இந்த ரயிலில் இருக்காது. மேலும் ஒலி அளவு 65 டெசிபல் அளவில் இருக்கும். இது விமானத்தில் வருகின்ற ஒலியைக் காட்டிலும் 100 சதவீதம் குறைவு. சென்னை-மைசூரு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. கண்டிப்பாக படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்தால் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை உயரும். இவ்வாறு தெரிவித்தார்.