வரலாற்றில் முதல் முறையாக பின்னலாடையில் 32 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம்- திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் நம்பிக்கை.!!

திருப்பூர்:திருப்பூர் பின்னலாடை துறை, தனது ஏற்றுமதி வரலாற்றில் முதல் முறையாக, நடப்பு நிதியாண்டில், 32 ஆயிரத்து 100 கோடி ரூபாய் வர்த்தகத்தை எட்டிப்பிடிக்க உள்ளது.இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியில் பின்னலாடைகள், அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.

நாட்டின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில், பின்னலாடை ஏற்றுமதி, 52 சதவீதமாக உள்ளது. லுாதியானா, பெங்களூரு போன்ற பல்வேறு நகரங்கள் பின்னலாடை ரகங்களை ஏற்றுமதி செய்கின்றன; ஆனாலும், மற்ற நகரங்களுக்கெல்லாம் முன்னோடியாக உள்ளது,

இந்திய பின்னலாடை ஏற்றுமதியில், திருப்பூரின் பங்களிப்பு, 52 சதவீதமாக உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பின்னலாடை ரகங்கள், அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன், கனடா என, உலகளாவிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வரலாறு, 1984 முதல் துவங்கியது. அப்போது, திருப்பூரின் ஆடை ஏற்றுமதி, அமெரிக்க டாலரில், வெறும் 64.71 கோடி ரூபாயாக இருந்தது.

படிப்படியாக வளர்ந்த ஏற்றுமதி, நடப்பு 2021 — 22ம் நிதியாண்டு துவக்கம் முதலே, திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து அதிகளவு ஆர்டர்கள் கிடைத்துவருகிறது.ஏப்., முதல் பிப்., வரையிலான நிதியாண்டின் 11 மாதங்களிலேயே, ஏற்றுமதி வர்த்தகம், 28,960 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது.மார்ச் மாத வர்த்தகமும் சேர்ந்து, நடப்பு நிதியாண்டில், திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், முதல் முறையாக, 32 ஆயிரத்து 100 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறும் என திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கணித்துள்ளது.