கோவையில் நாடாளுமன்ற தேர்தலுக்காக 30 பறக்கும் படைகள் தயார் – வாகன சோதனை இன்று தொடக்கம்.!!

கோவை : நாடாளுமன்றத்திற்கான தேர்தல் தேதி இன்று (சனிக்கிழமை) மாலை அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.கோவை ,பொள்ளாச்சி ஆகிய இரு தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது .இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் ,பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் கோவையில் வாகன சோதனை நடத்த 30 பறக்கும் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தேர்தல் தேதி அறிவித்த ஒரு மணி நேரத்திற்குள் வாகன சோதனையை தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தேர்தல் பறக்கும் படையினருக்கான பயிற்சி கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது .இதில் துணை கலெக்டர் சுரேஷ் கலந்து கொண்டு பறக்கும் படையினருக்கு பயிற்சி அளித்தார். இதில் வட்ட வளர்ச்சி அதிகாரி அந்தஸ்திலான அதிகாரிகள், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் ஒரு தொகுதிக்கு 3 வீதம் மொத்தம் 30 பறக்கும் படைகள் அமைக்ப்பட்டுள்ளன..இந்த பறக்கும் படை அதிகாரிகள் இன்று மாலை தேர்தல் தேதி அறிவித்ததும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் வாகன சோதனையை தொடங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் .தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அரசியல் கட்சியினர் தங்களது கட்சி கொடி கம்பங்கள், பிளக்ஸ் பேனர்ன்களை அகற்ற வேண்டும். இல்லை என்றால் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர்கள், மாநகராட்சி அதிகாரிகள் அடங்கிய குழுவினரால் அகற்றப்பட்டு அதற்கான செலவு சம்பந்தப்பட்ட கட்சி கணக்கில் வர வைக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.