சீனாவில் இருந்து கோவை வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

கோவை: ஷார்ஜா, சீனாவில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதிய வகை கரோனோ தொற்று பரவலை தடுக்கும் வகையில், கோவை விமான நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் 2 சதவீதம் பேருக்கும் ரேண்டம் முறையில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், ஷார்ஜாவில் இருந்து நேற்றுமுன்தினம் கோவை வந்த பயணிகளுக்கு ரேண்டம் முறையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் கோவை பீளமேட்டில் வசித்து வரும் 27 வயது இளம் பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதியானது. ஆனால் அவருக்கு காய்ச்சல், சளி இருமல் என எவ்வித அறிகுறிகளும் இல்லை.

இதனால், அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தி மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக சுகாதாரத்துறையினர் கூறும்போது, ‘எந்த வகையான கரோனா என்பதை கண்டறிய பெண்ணின் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு, சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கோவை சரவணம்பட்டியை சேர்ந்த கணவன், மனைவி கடந்த வாரம் சீனாவில் இருந்து, சிங்கப்பூர் வழியாக விமானம் மூலம் கோவை வந்தனர். அவர்கள் இருவருக்கும் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அறிகுறிகள் இல்லாததால் அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் சளி மாதிரிகளும் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றின் முடிவு இதுவரை வரவில்லை’ என்றனர்.