பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது 2 எஃப்ஐஆர், 10 புகார்கள் பதிவு – டெல்லி காவல்துறை அதிரடி.!!

புதுடெல்லி: மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகார்களின் பேரில்இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது இரண்டு எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து அவரை கைது செய்யக்கோரி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள் சாக்சி மாலிக், வினேஷ் போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த 28-ம் தேதி வீராங்கனைகள் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின்போது பேரணியாக செல்ல முயன்றனர் அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது போலீஸார் வீராங்கனைகளை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றினர். இதையடுத்து ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் நாட்டுக்காக வென்ற பதக்கங்களை ஹரித்துவாரில் உள்ள கங்கை நதியில் வீசப்போவதாக சாக்சி மாலிக், பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் உள்ளிட்டோர் அறிவித்தனர்.

பதக்கங்களையும் எடுத்துக் கொண்டு ஹரித்வாருக்கு சென்ற வீரர், வீராங்கனைகளை தடுத்து நிறுத்திய விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் விருதுகளை வீச வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்கள். இதை ஏற்று வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அங்கிருந்து சென்றனர்.

இந்த விவகாரம் உலக அளவில் கவனம் பெற்றது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, ஐக்கிய உலக மல்யுத்த அமைப்பும் மல்யுத்த வீராங்கனைகளின் பக்கம் நின்றது. இந்தச் சூழலில் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள பிரஜ் பூஷன் சரண் சிங்கி மீது 2 எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 10 புகார்கள் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் டெல்லி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அவர் மீது கொடுக்கப்பட்டுள்ள 10 புகார்களும் மல்யுத்த வீராங்கனைகளை தொடுதல் போன்ற பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீராங்கனைகளிடம் மிகவும் மோசமான செயலில் அவர் ஈடுபட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 28-ம் தேதி அவர் மீது 2 எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் ஒரு மைனரும் அடங்குவார். அவர் சார்பாக அவரது தந்தை புகார் கொடுத்துள்ளார்.

சட்டப்பிரிவு 354, 354(ஏ), 354(டி) மற்றும் 34 ஆகியவற்றின் கீழ் இந்த எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் பிரிவுகள் எனவும் தெரிகிறது.