ரக்ஷா பந்தன் நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம் – குடியரசுத் தலைவர்,பிரதமர் வாழ்த்து..!

புதுடெல்லி: சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் விழா நாடு முழுவதும் இன்று வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

ரக்ஷா பந்தன் விழா : சகோதர சகோதரிகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் கொண்டாடப்படும் பண்டிகை ரக்ஷாபந்தன். இப்பண்டிகை, ஹிந்தி காலண்டர் படி, ஒவ்வொரு ஆண்டும் ஷ்ரவன் மாதத்தில் ( அதாவது ஆகஸ்ட் மாதத்தில் ) வரும் முழு நிலவு நாளில் கொண்டாடப்படுகிறது.ராக்கி என்றும் இப்பண்டிகை அழைக்கப்படுகிறது. ரக்ஷா பந்தன் என்றால் பாதுகாப்பு பந்தம் என்பது பொருள். இந்த நாளில், சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் மணிக்கட்டில் ஒரு புனித கயிறு கட்டுவர். தீயவற்றில் இருந்து சகோதரர்களைக் காப்பாற்றவும், அவர்களது நல்வாழ்வுக்காகவும், நீண்ட ஆயுளுக்காகவும் சகோதரிகள் பிரார்த்தனை செய்து புனித கயிறு கட்டுவது வழக்கம். இந்நாளில், பெண்கள் புதிய ஆடைகள் அணிந்து, தமது சகோதரர்களின் மணிக்கட்டில் ராக்கி கட்டும் வரை எதுவும் சாப்பிடாமல் இருப்பார்கள். சகோதரர்களின் நெற்றியில் சிகப்பு குங்குமம் வைத்து, அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி பின்பு மணிக்கட்டில் ராக்கி என்னும் புனிதக் கயிற்றைக் கட்டுவர். பதிலுக்கு சகோதரர்கள், தங்கள் அன்பை தெரிவிக்கும் விதமாக சகோதரர்கள், சகோதரிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்குவார்கள்.

நாடு முழுவதும் கொண்டாட்டம்: ரக்ஷா பந்தன் விழா இந்த ஆண்டு இன்றும், சில பகுதிகளில் நாளையும் கொண்டடப்படுகிறது. ஜம்மு காஷ்மீரில் ரக்ஷா பந்தன் விழா, பாதுகாப்புப் படை வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. இதற்காக ‘Thanks Jawan’ என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏராளாமன இஸ்லாமியப் பெண்கள், தாங்களாகவே ராக்கி கயிறுகளை தயாரித்து ராணுவ வீரர்களின் மணிக்கட்டில் அணிவித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஜம்மு காஷ்மீரின் சர்வதேச எல்லைப் பகுதியான சம்பா செக்டரில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு ஏராளமான பள்ளிச் சிறுமிகள், ஆரத்தி எடுத்து, நெற்றித் திலகம் இட்டு, இனிப்பு ஊட்டி, ராக்கி கயிறு அணிவித்து தங்கள் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தனர்.

இதேபோல், சத்தீஸ்கர் தலைநகர் ராஞ்சியில் உள்ள துணை ராணுவப் படை வீரர்கள் முகாமுக்குச் சென்ற ஏராளமான பள்ளி மாணவிகளும், பெண்களும் வீரர்களுக்கு ஆரத்தி எடுத்து, நெற்றித் திலகம் இட்டு, இனிப்பு ஊட்டி, ராக்கி கயிறுகளை கட்டினர். பின்னர் அவர்களோடு இணைந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். ரக்ஷா பந்தனை முன்னிட்டு மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜெயினில் உள்ள மகாகாலேஸ்வரர் ஆலயத்திற்கு அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, ஏராளமான இனிப்பு வகைகள் படையலிடப்பட்டன.

கடைத்தெருக்களில் குவிந்த மக்கள்: ரக்ஷா பந்தனை முன்னிட்டு புத்தாடைகளை வாங்கவும், இனிப்புகளை வாங்கவும், ராக்கி கயிறுகளை வாங்கவும் நேற்றிவு பெரும்பாலான நகரங்களின் கடைத்தெருக்களில் மக்கள் குவிந்தனர். தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் ஏராளமான பெண்கள் கடைத்தெருக்களில் குவிந்து, பொருட்களை வாங்கிச் சென்றனர். இதேபோல், தலைநகர் டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களிலும் மக்கள் கூட்டம் களைக்கட்டியது.

தலைவர்கள் வாழ்த்து: ரக்ஷா பந்தனை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு, நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் சகோதர- சகோதரிகளை இணைக்கும் அன்பின் அழகான பிணைப்பை உள்ளடக்கியது. மேலும் பரஸ்பர நம்பிக்கையுடன் தவிர்க்கமுடியாத உறுதிப்பாட்டுடன் அவர்களை ஒன்றிணைக்கிறது. இந்த ரக்ஷா பந்தன் நாளில், இந்தியாவை மேலும் பெருமைப்படுத்தும் வகையில் முன்னெடுத்துச் செல்ல உறுதிபூண்டுள்ள நமது ‘மகளிர் சக்தி’க்கு ஆதரவாக நிற்போம் என்று உறுதியேற்போம். இந்த பண்டிகை நம் வாழ்வில் மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் அதிகரிக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ரக்ஷா பந்தன் வாழ்த்துச் செய்தியில், “எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள். சகோதரிக்கும் சகோதரனுக்கும் இடையிலான உடைக்க முடியாத நம்பிக்கை மற்றும் அபரிமிதமான அன்பிற்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த ரக்ஷாபந்தன் பண்டிகை, நமது கலாச்சாரத்தின் புனிதமான பிரதிபலிப்பாகும். இந்த விழா அனைவரின் வாழ்விலும் பாசம், மற்றும் நல்லிணக்க உணர்வை ஆழப்படுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்..