12ம் வகுப்பு ரிசல்ட்… மாணவிகள் 96.38%, மாணவர்கள் 91.45% தேர்ச்சி- விருதுநகர் முதலிடம்.!!

சென்னை: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்.

www.tnresults.nic.in, dge.tn.gov.in, dge2.tn.nic.in- ல் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத 8.65 லட்சம் பேர் பதிவு செய்திருந்த நிலையில் 8.17 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.

பிளஸ் 2 தேர்வு எழுதிய 8.03 லட்சம் பேரில் 7.55 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவிகள் 4,05,753 பேரும், மாணவர்கள் 3,49,697 பேரும் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். பிளஸ் 2 தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவிகள் 96.38%, மாணவர்கள் 91.45% தேர்ச்சி அடைந்திருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மாணவர்களைவிட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 97 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருப்பூர் மாவட்டம் 2-ம் இடம், பெரம்பலூர் மாவட்டம் 3-ம் இடம் பிடித்தது.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 93.76% பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் இந்த ஆண்டு 94.03% பேர் தேர்ச்சி பெற்றிருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் அரசுப் பள்ளிகளில் 89.80% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகள் – 95.99%, தனியார் சுயநிதி பள்ளிகள் – 99.08% பேர் தேர்ச்சி பெற்றுள்ளது. இரு பாலர் பள்ளிகள் – 94.39%, பெண்கள் பள்ளிகள் 96.04%, ஆண்கள் பள்ளிகள் 87.79% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.