ஊட்டி, 2-ம் பருவ சீசனை முன்னிட்டு, ஊட்டியில் அரசினா் தாவரவியல் பூங்காவில் தோட்டக் கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில், மலா் காட்சி மாடத்தில் மலா்த்தொட்டிகளை அடுக்கும் பணிகளை வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார். பின்னர் அமைச்சா் ராமச்சந்திரன் கூறியதாவது:- ஊட்டி அரசினா் தாவரவியல் பூங்காவில் இந்த ஆண்டு 2-ம் பருவத்தினை முன்னிட்டு, பூங்காவில் அனைத்து பகுதிகளிலும் பல்வேறு வகையான 4 லட்சம் மலா்ச்செடிகள் கொண்டு மலா் பாத்திகள் அமைக்கப்பட்டு தற்போது பூக்கள் மலா்ந்து காட்சி அளிக்கிறது.
கொல்கத்தா, காஷ்மீா், பஞ்சாப், புனே போன்ற வெளி மாநிலங்களிலிருந்து விதைகள் பெறப்பட்டு டேலியா, சால்வியா, இன்கோ மெரிகோல்டு, பிரெஞ்ச் மெரிகோல்டு, பிகோனியா, டெய்சி, கேலண்டூலா, டயான்தஸ், கிரைசாந்திமம், ஆஸ்டா், பிரிமுலா, பால்சம், அஜிரேட்டம், சைக்ளமன், டியூப்ரஸ் பிகோனியா, ஜெரேனியம் உள்ளிட்ட ரகங்களில் 10,000 மலா்த்தொட்டிகள் மலா்காட்சி திடலில் அடுக்கி வைத்து காட்சிப்ப டுத்தப்பட்டுள்ளது. இயற்கை வேளாண்மை நீலகிரி மாவட்டத்தை இயற்கை வேளாண்மை மாவட்டமாக மாற்றுவதற்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இயற்கை வேளாண்மையை நோக்கி என்ற வாசகம் 2,000 மலா்தொட்டிகளால் மலா்க்காட்சி திடலில் வடிவமைக்கப்பட்டு காட்சிப்படு த்தப்பட்டுள்ளது.
நெகிழி இல்லாத மாவட்டமாக மாற்றும் பொருட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், பெரணி இல்லம் அமைந்துள்ள புல்வெளி மைதானத்தில் மஞ்சப்பையை பயன்படுத்தும் நோக்கமாக 5,000 மலா்தொட்டிகள் சுற்றுலா பயணிகளுக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மலா்காட்சி திடல் சுற்றுலா பயணிகளுக்காக ஒரு மாதத்துக்கு காட்சிப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர் இதில், மாவட்ட ஊராட்சி தலைவா் பொன்தோஸ், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் ஷிபிலா மேரி, உதவி இயக்குநா் பாலசுந்தரம், மேலாளா்கள் இலக்கியா, கவின்யா மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா். தற்போது தொடர் விடுமுறை என்பதால் நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து உள்ளனர். அவர்கள் ஊட்டி தாவரவியல் பூங்காவில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மலர் செடிகளை கண்டு ரசித்தனர்.
Leave a Reply