கோவையில் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-1, பிளஸ்-2 பொது தேர்வை 1.11 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள்..!

கோவை: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் முதல் ஏப்ரல் வரை நடக்கிறது.

இதில், பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வருகிற மார்ச் 13-ந் தேதி தொடங்கி, ஏப்ரல் 3-ந் தேதி வரை நடக்கிறது. பிளஸ்- 1 மாணவர்களுக்கான தேர்வுகள் வருகிற மார்ச் 14-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 5-ந் தேதி வரை நடக்கிறது. மேலும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வருகிற ஏப்ரல் 6-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடக்கிறது. பொதுத்தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடக்கிறது. பிளஸ்-1 மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் வருகிற மார்ச் 7-ந் தேதி முதல் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், நடப்பாண்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு அட் டவணையில் மாணவர்கள் எம்.பி.பி.எஸ். , என்ஜினீயரிங், வேளாண் போன்ற உயர்கல்வி சேர்க்கைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் போதிய கால அவகாசம் அளிக்கப்பட்டு முக்கிய பாடங்களுக்கான தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இயற்பியல் பாடத்திற்கு 5 நாட்கள், கணித பாடத்திற்கு 5 நாட்கள், உயிரியல் பாடத்திற்கு 3 நாட்கள், வேதியியல் பாடத்திற்கு 2 நாட்கள் என கால இடைவெளி அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல பிளஸ்-1 மாணவரகளுக்கும் முக்கிய பாடங்களுக்கு போதிய கால இடைவெளி அளித்து தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டு உள்ளது. மேலும் 10-ம் வகுப்பில் கணிதம், சமூக அறிவியல் பாடங்களுக்கு 2 நாட்கள், அறிவியல் பாடத்திற்கு 4 நாட்கள் கால இடைவெளி அளிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகளை எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வை எழுத உள்ளனர்.

கோவை மாவட்டத்தில் அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகள். தனியார் பள்ளிகளை சேர்ந்த 1.11 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதவுள்ளனர்.மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 41 ஆயிரத்து 526 மாணவ, மாணவிகளும், பிளஸ்-1 பொதுத்தேர்வினை 34 ஆயிரத்து 259 மாணவ -மாணவிகளும், பிளஸ்-2 பொதுத்தேர்வினை 35 ஆயிரத்து 541 மாணவ, மாணவிகளும் எழுத உள்ளனர்.

பொது தேர்வுகளில் கடந்த ஆண்டுகளைவிட மாணவர் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும் வகையில் மாணவர்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றனர். பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் நடத்தப் பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கோவை மாவட்டம் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 96.91 சதவீதம் தேர்ச்சியுடன் மாநில அளவில் 4-வது இடத்தையும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.38 சதவீதம் தேர்ச்சியுடன் மாநில அளவில் 9-வது இடத்தையும் பிடித்து இருந்தது.