இனி வீடு தேடி வருது உங்க சொத்து ஆவணங்கள்!

தமிழகத்தில் சொத்து பதிவு நடைமுறையை எளிமைப்படுத்தும் வகையில், பதிவு செய்யப்பட்ட சொத்து ஆவணங்களை ஒரே இடத்தில் அச்சிட்டு, தபால் மூலம் உரிமையாளர்களின் வீடுகளுக்கே அனுப்பும் வகையில் மையப்படுத்தப்பட்ட அச்சக வசதியை ஏற்படுத்த தமிழக அரசு நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளது.இது தொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பதிவு செய்யப்பட்ட சொத்து ஆவணங்கள் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய பிரத்யேக காகிதத்தில் மையப்படுத்தப்பட்ட அச்சகத்தில் அச்சிடப்படும். இதற்கான பாதுகாப்புக் காகிதங்களை தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்திடம் இருந்து பதிவுத்துறை தலைவர் நேரடியாக கொள்முதல் செய்வார்.

அச்சிடப்பட்ட சொத்து ஆவணங்களை இந்திய அஞ்சல் துறை மூலம் ஸ்பீட் போஸ்டில் சொத்து வாங்கியவர்களின் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு நேரடியாக அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் 48 மணி நேரத்திற்குள் ஆவணங்களை விநியோகிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொலைதூர மாவட்டங்களுக்கு அதற்கேற்ற காலக்கெடு நிர்ணயிக்கப்படும். மேலும், இந்த நடைமுறை அமலுக்கு வந்தால், சொத்து ஆவணங்களைப் பெறுவதற்காக பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் குறையும் ஆவணங்கள் அச்சிடுதல், பாதுகாப்பு மற்றும் விநியோகம் ஆகியவை ஒருங்கிணைந்த முறையில் மேற்கொள்ளப்படும்.

போலி ஆவணங்கள் தயாரிப்பதைத் தடுக்கும் வகையில் ஹாலோகிராம், மைக்ரோ பிரிண்டிங், வரிசை எண் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெறும். அச்சகத்தின் செயல்பாடுகள் மற்றும் ஆவணங்களின் பாதுகாப்பை பதிவுத்துறை கண்காணிக்கும். இந்த மையப்படுத்தப்பட்ட அச்சக வசதியை ஏற்படுத்த தமிழக அரசு நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளது.