திமுக, திரிணாமுல், சமாஜ்வாதியை தொடர்ந்து காங்கிரஸுக்கு சொற்பமான இடங்களை ஒதுக்கும் ஆம் ஆத்மி…

டெல்லி: லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதியை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸுக்கு சொற்பமான இடங்களை ஒதுக்க முன்வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து “இந்தியா” கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி கட்சி, இடதுசாரிகள் உள்ளிட்ட 28 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் “இந்தியா” கூட்டணியில் தொகுதி பங்கீடு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு 8 முதல் 10 இடங்களை திமுக ஒதுக்க முன்வந்துள்ளது. இந்த கூட்டணியில் பாமக இடம் பெற்றால் 4 முதல் 5 இடங்களைத்தான் காங்கிரஸுக்கு ஒதுக்குவதாகவும் திமுக தெரிவித்திருக்கிறது. மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸுக்கு அதிகபட்சமாக 2 தொகுதிகளைத்தான் ஒதுக்க முடியும் என்கிறது முதல்வர் மமதாவின் திரிணாமுல் காங்கிரஸ். உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மிக அதிகபட்சமாக 5 தொகுதிகளை கொடுப்பதாக சொல்கிறது அகிலேஷ் யாதாவின் சமாஜ்வாதி கட்சி. மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே சிவசேனா 23 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

இந்த வரிசையில் தற்போது காங்கிரஸுக்கு மிக சொற்பமான இடங்களை ஒதுக்க முன்வந்துள்ளது டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி. டெல்லியில் காங்கிரஸுக்கு 3 தொகுதிகளை ஒதுக்குகிறதாம் ஆம் ஆத்மி. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸுக்கு 6 தொகுதிகளை தருவதாக சொல்லி இருக்கிறது ஆம் ஆத்மி. அதே நேரத்தில் குஜராத்தில் 1, ஹரியானாவில் 3, கோவாவில் 1 தொகுதியை காங்கிரஸிடம் கேட்கிறதாம் ஆம் ஆத்மி. ஹரியானாவில் மொத்தம் 10 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் 3 தொகுதிகளை ஆம் ஆத்மி கேட்பது காங்கிரஸுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம். ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணி கட்சிகள் இப்படி சொற்ப இடங்களை ஒதுக்குவதால் காங்கிரஸ் தலைவர்கள் கொந்தளித்து போயுள்ளனர். மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மமதா பானர்ஜி எங்களுக்கு பிச்சை போட வேண்டாம் என காட்டமாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.