மத்திய அமைச்சர்: கிருஷ்ணா நதி படுகையில் கச்சா எண்ணெய்.. விரைவில் 45 ஆயிரம் பேரல்கள் உற்பத்தி…

பெங்களூர்: கிருஷ்ணா, கோதாவரி ஆற்று படுகையில் இருந்து முதல் முறையாக நேற்று கச்சா எண்ணெய் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார். மேலும் இதன் மூலம் விரைவில் தினமும் 45 ஆயிரம் பேரல்கள் வரை கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய முடியும் என்று நம்பிக்கை உள்ளது என்றும் தெரிவித்தார். இந்தியா தனது எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய பெரிதும் இறக்குமதியைத்தான் நம்பியிருக்கிறது. அதாவது, இந்தியா தனது ஆற்றல் தேவைகளில் 85% இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்கிறது. இறக்குமதி அதிகமாகச் சார்ந்திருப்பதைக் குறைக்க, உள்நாட்டில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஒஎன்.ஜி.சி இந்தியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது. தனியார் துறையை சேர்ந்த நிறுவனங்களும் கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. எனினும், இந்தியாவின் எரிபொருள் தேவைக்கு இங்கு தயாரிக்கப்படும் எண்ணெய் உற்பத்தியின் அளவு மிக மிக குறைவே ஆகும். இதனால், கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய எண்ணெய் வயல்கள் குறித்த ஆய்வுகளை இந்திய பெட்ரோலியத்துறை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தான் ஆந்திர மாநிலம் காக்கிநாடா கடலோர பகுதிகளில் கிருஷ்ணா- கோதாவரி நதியை ஒட்டிய 30 கி.லோ மீட்டர் ஆற்றுப்படுகைகளில் கச்சா எண்ணெய் உற்பத்தியை தொடங்கியிருப்பதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கர்நாடகாவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஹர்தீப் சிங் பூரி கூறியதவாது:- காக்கிநாடா கடற்கரையை ஒட்டியுள்ள கிருஷ்ணா கோதாவரி ஆற்று படுகையில் இருந்து முதல் முறையாக நேற்று கச்சா எண்ணெய் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் 2016-17 ஆண்டில் தொடங்கப்பட்டது. ஆனால், கொரோனா காரணமாக கொஞ்சம் தாமதம் ஏற்பட்டது. ஆனால், அங்குள்ள 24 எண்ணெய் கிணறுகளில் 4 செயல்பட்டு வருகிறது. நம்மிடம் எரிவாயு மட்டும் அல்ல.. விரைவில் அதாவது மே, ஜூன் மாதத்திற்குள் தினமும் 45 ஆயிரம் பேரல்கள் வரை கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய முடியும் என்று நம்பிக்கை உள்ளது. இது நமது மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தியில் 7 சதவிகிதம் ஆகும். மேலும் நமது கேஸ் உற்பத்தியில் 7 சதவிகிதம் ஆகும். என்று கூறியுள்ளார்.