3வது நாளாக 7 ஹெலிகாப்டர் மூலம் நிவாரண பணி: வெள்ளத்தில் தத்தளிக்கும் தூத்துக்குடி…

வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதன் காரணமாக வட மற்றும் தென் மாவட்டங்களை வெள்ளம் புரட்டி போட்டது. குறிப்பாக வரலாறு காணாத வகையில் மழையானது கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக பல இடங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து மீட்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், படகு மூலம் செல்ல முடியாத இடங்களில் ஹெலிகாப்டர் மூலம் நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக மதுரை மாவட்டம் நிர்வாகம் ஏற்பாட்டில் வெள்ள நிவாரண பொருட்கள் 7 ஹெலிகாப்டர்கள் மற்றும் 2 சிறியரக விமானங்கள் மூலம் நேற்று காலை 06.00 மணியில் ஆரம்பித்து 16 முறை நிவாரண பொருட்கள் 12,850 கிலோ (தண்ணீர் பாட்டில், பிரட், பால் பவுடர் பிஸ்கட் மற்றும் சில) ஆகியவை தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் பின்னர் தூத்துக்குடியில் பெய்த மழை மற்றும் வானிலை சரியில்லாத காரணத்தால் நிவாரண பொருட்கள் கொண்டு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. எனவே இன்று காலை 8 மணி முதல் 7 ஹெலிகாப்டர் மற்றும் ஒரு சிறிய ரக விமானம் மூலம் நிவாரணம் மற்றும் உணவுப் பொருட்கள் கொண்டு செல்லும் பணி தொடங்கியது. இரண்டு நாட்களாக உணவு மற்றும் நிவாரண பொருட்கள் 22 ஆயிரத்து 850 கிலோ தூத்துக்குடி மாவட்டத்திற்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் உள்ள மக்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரு சில இடங்களில் இன்னும் உணவுகள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதியுற்று வரும் நிலையிலும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க உள்ளதால் மூன்றாவது நாளாக இன்றும் 7 ஹெலிகாப்டர்கள் , ஒரு சிறியரக விமானத்துடன் நிவாரணம் மற்றும் உணவுப்பொருட்கள் ஹெலிகாப்டர்களில் ஏற்றப்பட்டு காலை 8 மணி முதல் உணவு வழங்கும் பணியானது தொடங்கியது.