ஜக்தீப் தன்கர் உருவக்கேலி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ஜனாதிபதி திரௌபதி முர்முவும், பிரதமர் நரேந்திர மோடியும் ஆதரவு தெரிவித்துள்ளனர்…

உருவக்கேலி சர்ச்சை: நாடாளுமன்றத்தில் துணை குடியரசுத் தலைவரும் மாநிலங்களவை சபாநாயகருமான ஜக்தீப் தன்கர் உருவக்கேலி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ஜனாதிபதி திரௌபதி முர்முவும், பிரதமர் நரேந்திர மோடியும் ஆதரவு தெரிவித்துள்ளனர் என துணை ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. “பிரதமர் மோடியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. சில எம்.பி.க்களின் கேவலமான செயல் குறித்து அவர் மிகுந்த வேதனையை வெளிப்படுத்தினார். அதுவும் புனிதமான பாராளுமன்ற வளாகத்தில் இப்படி நடந்திருப்பது குறித்து வருத்தம் தெரிவித்தார்” என்று துணை ஜனாதிபதி அலுவலகம் கூறியுள்ளது.

“இருபது ஆண்டுகளாக தானும் இதுபோன்ற அவமானங்களுக்கு ஆளாகியிருப்பதாக அவர் என்னிடம் கூறினார்” என்று ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் மூலம் கடமையைச் செய்வதிலிருந்து தன்னைத் தடுக்க முடியாது என்றும் ஜக்தீப் தன்கர் பிரதமரிடம் உறுதி கூறியிருக்கிறார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, “நாடாளுமன்ற வளாகத்தில் மதிப்பிற்குரிய துணை ஜனாதிபதி அவமானப்படுத்தப்பட்ட விதத்தைப் பார்த்து நான் திகைத்துப் போனேன்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும், “தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தங்களை சுதந்திரமாக இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் கண்ணியம் மற்றும் மரியாதையுடன் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும். அதுதான் நம் பெருமைக்குரிய நாடாளுமன்றத்தின் பாரம்பரியம். அதை அவர்கள் நிலைநாட்ட வேண்டும் என்று இந்திய மக்கள் எதிர்பார்க்கிறார்கள்” என்றும் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.  எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தின் படிக்கட்டுகளில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி, மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தங்கர் போல நடித்து கேலி செய்தார். அதை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது போனில் வீடியோ பதிவு செய்தார். இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ராஜ்யசபாவில் தனது வேதனையை வெளிப்படுத்திய ஜக்தீப் தன்கர், தான் ஒரு விவசாயி என்பதாலும் ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதாலும் இவ்வாறு குறிவைக்கப்படுவதாகவும் இதனால் தனிப்பட்ட முறையில் தான் காயப்பட்டதாகவும் கூறினார்.