வாவ்! சூப்பர்!! நல்ல முயற்சி… ‘மாணவர் மனசு’ என்ற புகார் பெட்டி… கோத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைப்பு ..!!

ஊட்டி:
சமீப காலமாக பள்ளிக்கூடங்களில் பெண் குழந்தைகள் மீது பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்கள் நிறைய வருகின்றன. இதையடுத்து பள்ளிக்கூடங்களில் ஒரு குழு அமைக்க பரிந்துரைத்திருந்ததுடன், மாணவர்கள் தங்கள் புகார்களை தெரிவிப்பதற்கு ஒரு புகார் பெட்டியும் வைக்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை செயல்படுத்தும் வகையில் பள்ளிக்கல்வித்துறை 31 ஆயிரத்து 214 அரசு இடைநிலை பள்ளிகூடங்களிலும், 6 ஆயிரத்து 177 மேல்நிலை பள்ளிக்கூடங்களிலும் புகார் பெட்டி வைப்பதற்காக ஒவ்வொரு பள்ளிக்கூடத்திற்கும் ரூ.1000 நிதி ஒதுக்கியிருக்கிறது.
இதுதவிர அனைத்து அரசு பள்ளிக்கூடங்களிலும் தலைமை ஆசிரியர் தலைமையில் 2 ஆசிரியர்கள், ஒரு பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர், ஒரு ஆசிரியரில்லாத பணியாளர், ஒரு நிர்வாக பணியாளர், ஒரு வெளி உறுப்பினர் ஆகியோர் கொண்ட மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக்குழு கூட்டம் மாதம் ஒருமுறை நடத்தப்படவேண்டும். மேலும், மாணவர்கள் தங்கள் புகார்களை பதிவுசெய்ய அனைத்து அரசுப்பள்ளிகளிலும் மாணவர்களுக்கான புகார்பெட்டி வைக்கப்படவேண்டும். அந்த பெட்டியில் ‘மாணவர் மனசு’ என்று எழுதப்பட்டு, பள்ளி தலைமை ஆசிரியர்களின் அறைக்கு முன்பாக அனைத்து மாணவர்களும் பார்க்கக்கூடிய வகையில், அனைவரும் எளிதில் அணுகக்கூடிய வகையில் இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் மனசு என்ற பெயரில் புகார் பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு விழிப்புணர்வு பதாகைகளும், மாணவ, மாணவிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பள்ளியின் தலைமைஆசிரியர் கூறுகையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் உத்தரவு படி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. 15 நாட்களுக்கு ஒருமுறை புகார் பெட்டியை மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் திறந்து, அதில் இருக்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.