கந்து வட்டி கொடுமையால் விஷம் குடித்த பெண் திருச்சியில் மரணம்..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கண்ணார சந்து தெருவை சேர்ந்தவர் பாத்திமா பீவி. இவரது கணவர் ஜெய்லானி. கணவரின் நண்பர் அமீது என்பவருக்கு தனியார் பைனான்ஸ் மூலமாக எல்.இ.டி டிவி வாங்குவதற்காக கடன் வாங்கி கொடுத்துள்ளார். அமீது கடன் வாங்கிய ஒரு சில மாதத்தில் ஊரை காலி செய்துவிட்டு வெளியூர் சென்று விட்டார். இந்த நிலையில் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் பாத்திமா பீவி வாங்கி கொடுத்த கடனுக்காக, மூன்று மாதங்கள் வட்டி கட்டி உள்ளார். அதற்கு மேல் வட்டி கட்ட முடியாத நிலையில், மகா பைனான்ஸ் என்ற நிறுவனத்தின் ஊழியர்கள் அவரை வட்டி கட்ட சொல்லி தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளனர்.

இதனால் பாத்திமா பீவி தனக்கு தெரிந்தவர்களிடம் பணம் கேட்டுள்ளார். வேறொரு பைனான்ஸ் நிறுவனத்தில் பணம் வாங்கி தருவதாக நண்பர் ஒருவர் அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அதே பைனான்ஸ் என்பது தெரியாமல் பாத்திமா பீவி அங்கு சென்ற நிலையில், அந்த பைனான்ஸ் ஊழியர்கள் அவரை தரக்குறைவாக தகாத வார்த்தைகளில் பேசியும், அவரிடம் வீட்டு சாவியை வாங்கிக்கொண்டு வீட்டிலிருந்த டிவியை எடுத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. மேலும், இருசக்கர வாகனத்தில் பாத்திமா பீவியை அழைத்து வந்து வீட்டில் இறக்கி விட்டு விட்டு, பொங்கல் பண்டிகையை ஒட்டி ரேஷன் கடையில் கொடுத்த ஆயிரம் ரூபாய் பணத்தையும் வாங்கி சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பாத்திமா பீவி, வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். உறவினர்கள் அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி பாத்திமா பீவி உயிரிழந்தார்.இந்த நிலையில் பைனான்ஸ் ஊழியர்கள் தன்னை கொடுமைப்படுத்தியது குறித்து இறப்பதற்கு முன்பு அவர் பேசிய வீடியோ மற்றும் கடிதம் ஆகியவற்றை கொண்டு, கரூர் நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கந்துவட்டி கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் திருச்சி கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.