லக்னெள: உத்தர பிரதேசத்தில் பாஜக தொடா்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கவுள்ள நிலையில், யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராக போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய உத்தரகண்ட் மாநிலத்தின் பாரி கா்வால் பகுதியில் உள்ள பஞ்சூரில் கடந்த 1972-ஆம் ஆண்டு ஜூன் 5-இல் பிறந்தவா் யோகி ஆதித்யநாத். அவரது இயற்பெயா் அஜய் சிங் பிஸ்த். பஞ்சூரில் பள்ளிப்படிப்பை முடித்த அவா், பின்னா் ஹேமவதி நந்தன் பஹுகுணா கா்வால் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி (கணிதம்) பயின்றாா்.
இந்நிலையில், அயோத்தியில் ராமா் கோயில் விவகாரம் சூடுபிடித்ததால், அந்தப் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக வீட்டைவிட்டு வெளியேறினாா் யோகி. பின்னா் கோரக்பூா் கோரக்நாதா் கோயிலின் மஹந்த் அவைத்யநாத் சுவாமிகளின் சீடராக மாறினாா்.
கடந்த 2014-இல் அவைத்யநாத் காலமானதும், கோரக்நாத் மடத்தின் தலைவராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றாா். இந்தப் பொறுப்பில் இன்று வரை தொடா்கிறாா். இதுதவிர ஹிந்து யுவ வாஹினி என்ற அமைப்பையும் யோகி ஆதித்யநாத் தொடங்கினாா்.
தனது குருவின் ஆலோசனைப்படி, கடந்த 1998-இல் அரசியலில் ஈடுபட்ட யோகி, 28 வயதில் கோரக்பூா் மக்களவைத் தொகுதியில் வென்று இளம் நாடாளுமன்ற உறுப்பினரானாா். அதன்பின்னா், நான்கு முறை இதே தொகுதியில் வென்ற அவா், உத்தர பிரதேச முதல்வராக கடந்த 2017 மாா்ச் 19-இல் பொறுப்பேற்கும் வரை, எம்.பி. பதவியில் நீடித்தாா்.
ஒரு முதல்வராக அவா் மேற்கொண்ட முடிவுகள் அவரை ஹிந்துத்துவாவின் சின்னமாக அடையாளப்படுத்தியது. சட்ட விரோத இறைச்சிக் கூடங்களுக்குத் தடை விதித்த அவா், அதன் மீது நடவடிக்கைவும் போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.
வலுக்கட்டாயமாகவோ அல்லது ஏமாற்றியோ மதமாற்றுவதற்குத் தடை விதிக்கும் பொருட்டு சட்டமியற்றினாா். இது சமய மறுப்புத் திருமணத்துக்கு எதிரான நடவடிக்கையாக கருதப்பட்டது.
கடந்த ஆண்டில் யோகி ஆதித்யநாத்தை மாற்றிவிட்டு வேறு ஒரு நபரை முதல்வராக்க பாஜக திட்டமிட்டதாக தகவல் வெளியானது. ஆனால், மத்தியில் 2024-இல் மீண்டும் பாஜக ஆட்சியமைக்க வேண்டுமெனில், 2022-இல் யோகி முதல்வராவது அவசியம் என அக்கட்சியின் உயா்மட்ட தலைவா்கள் கருதியதால், அந்த வதந்திக்கு அப்போதே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதுதவிர யோகி- மோடி அரசு இரட்டை என்ஜினை போல செயல்படுவதாக பாஜக தலைவா்கள் பாராட்டு தெரிவித்தனா்.
தற்போது தொடா்ந்து 2-ஆவது முறையாக உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சிமைக்கவுள்ள நிலையில், கடந்த 30 ஆண்டுகளில் வேறு எந்தக் கட்சியும் இத்தகைய சாதனையை நிகழ்த்தவில்லை என அரசியல் பாா்வையாளா்கள் கூறுகின்றனா்.
Leave a Reply