அதிமுக விவகாரத்தில் வெளிப்படைத் தன்மையுடன் தான் இருக்கிறோம்- சபாநாயகர் அப்பாவு பேச்சு..!

அதிமுக விவகாரத்தில் வெளிப்படைத் தன்மையுடன் தான் இருக்கிறோம் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

16-வது சட்டமன்றப் பேரவை நடவடிக்கை குறிப்புகள், சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படத் திறப்பு விழாவின் சிறப்பு வெளியீடு போன்றவற்றை பொது மக்களின் பார்வைக்கு சட்டமன்றப் பேரவையின் இணையதளமான https://www.assembly.tn.gov.in இல் பதிவேற்றம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படதிறப்புவிழா சிறப்பு வெளியீட்டை பதிவேற்றம் செய்யும் பணியை தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, 16வது சட்டப்பேரவையின் நடவடிக்கை குறிப்புகள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றது. அதிமுக தரப்பில் கடிதங்கள் வருவதற்கு முன்னரே நீங்களே செய்தியை போட்டுவிடுகிறீர்கள். அதிமுக உட்கட்சி பிரச்சனை ஒன்னும் அவசர பொதுமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை அல்ல.

சட்டமன்ற அதிமுக துணைத்தலைவர்? விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது என எதிர்க்கட்சித் தலைவரே கூறியுள்ளார். சட்டமன்றம் வேறு, நீதிமன்றம் வேறு. யாருக்கும் எதையும் கட்டுப்படுத்தக் கூடாது. எவ்வளவு காலமாக வாக்கெடுப்பில் உள்ள பிரச்சனைகளெல்லாம் இன்னும் முடிவெடுக்கப்படாமல் உள்ளது.

யார் மீதும் விருப்பு, வெறுப்பில்லாமல் ஜனநாயக முறையில் நடவடிக்கை எடுக்கப்படும். 4 பிரிவாக அதிமுகவினர் உள்ளனர். இதற்கு வேறு யாரும் துளி கூட காரணமில்லை. இந்த பிரச்னையில் மற்றவர்கள் தலையிட்டு குளிர்காய விரும்பவில்லை.

அதிமுக உட்கட்சி பிரச்னையில் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கிறோம். ஜனநாயக ரீதியான போக்கில் மாற்றமில்லை, எப்போதும் நடுநிலையோடு தான் இருப்போம் என்று கூறினார்.