பொள்ளாச்சி:
கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. மாநகரில்
உள்ள பல்வேறு விநாயகர் கோவில்கள், பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த
இடங்களில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவை சாடிவயல் யானைகள் முகாம், முதுமலை
யானைகள் முகாம் ஆகிய முகாம்களில் உள்ள கும்கி யானைகளுக்கு பூஜைகள்
நடத்தப்பட்டன. முகாமில் உள்ள கும்கிகளுக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதையடுத்து பழங்கள், சத்து மாவு உள்ளிட்ட சிறப்பு
உணவுகளும் வழங்கப்பட்டன. இதேபோன்று டாப்சிலிப்பில் உள்ள கோழிகமுக்தி யானைகள் முகாமில் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு யானைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப்பில் கோழிகமுக்தி பகுதியில் யானைகள் வளர்ப்பு முகாம் உள்ளது.
இந்த முகாமில் 26 வளர்ப்பு யானைகள் உள்ளன. இங்குள்ள யானைகளுக்கு நேற்று
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. முகாம்
பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு
யானைகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. விநாயகர் கோவிலில் யானைகள்
வழிபாடு செய்தன. வனச்சரகம் சார்பில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது.