சென்னை: ”12 மணிநேரம் நடந்த சோதனையில் எதுவும் கிடைக்காததால் எனது செல்போன், வீட்டில் உள்ள செல்போனை கேட்டு வாங்கி சென்றுள்ளனர்.
இது உச்சக்கட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது” என லஞ்ச ஒழிப்பு சோதனை பற்றி அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்களின் வீடுகளில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி இன்று காலை அதிமுகவின் 2 முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கரின் வீடு உள்பட 13 இடங்களிலும், முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சரான எஸ்பி வேலுமணியின் வீடு அலுவலகம் உள்பட 26 இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டது.
குறிப்பாக தேசிய மருத்துவ குழுமத்தின் விதிமுறைகளுக்கு முரணாக ஊத்துக்கோட்டை அருகே மஞ்சக்கரணை என்ற பகுதியில் மருத்துவமனையே கட்டப்படாத நிலையில் வேல்ஸ் கல்லூரி மற்றும் மருத்துவமனை என்பது 250 படுக்கை வசதிகளுடன் 2 ஆண்டுகளாக செயல்பட்டு வருவதாகவும், புதிய மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கு மருத்துவமனை தகுதியானது எனவும் சான்றிதழ் வழங்கிய புகாரின் அடிப்படையில் விஜயபாஸ்கரின் வீட்டில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர், ஐசரி கணேஷ் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டும் 13 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை இன்று மாலையில் முடிவுக்கு வந்தது. விஜயபாஸ்கரின் வீட்டில் மட்டும் 12 மணிநேரம் சோதனை நடந்தது.
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிட்ட செய்தியில், ”முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் ரூ.18.37 லட்சம் பணம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 1,872 கிராம் தங்கம், 8.28 கிலோ வெள்ளி பொருட்கள் கண்டறியப்பட்டதாகவும், 120 ஆவணங்கள், சிடி, பென்டிரைவ், 2 ஐபோன்கள், 4 வங்கி பெட்டக சாவிகளை கைப்பற்றியதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதனை முற்றிலுமாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மறுத்துள்ளார். லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு பிறகு அவர் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர், ”எனது வீட்டில் 12 மணிநேரம் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அரசு இயந்திரத்தை காழ்ப்புணர்ச்சியால் பயன்படுத்தி உள்ளனர். அரசு இயந்திரத்தை உச்சக்கட்ட காழ்ப்புணர்ச்சியால் பயன்படுத்தி உள்ளனர். தற்போது 2வது முறையாக லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்துள்ளது.
சோதனையில் எதுவும் கைப்பற்ற முடியாத நிலையில் எனது செல்போன் வீட்டு செல்போன் ஆகியவற்றை கேட்டு விசாரணைக்காக வாங்கி சென்றுள்ளனர். மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி அளித்த விவகாரத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. முறைப்படி பின்பற்றப்படும் விதிகள் படி தான் வழங்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணமாகும்” என்றார்.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது ஏற்கனவே, குட்கா சட்டவிரோத விற்பனைக்கு லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர் தொடர்பான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஏற்கனவே சோதனை நடத்தி இருந்தனர். தற்போது 2வது முறையாக மருத்துவக்கல்லூரி அனுமதி தொடர்பான விஷயத்தில் மீண்டும் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.