12 காவல் ஆய்வாளர்கள் டி.எஸ்.பி’யாக பதவி உயர்வு!

மிழகக் காவல் துறையில் நீண்ட நாட்களாகப் பதவி உயர்வுக்காகக் காத்திருந்த 12 காவல் ஆய்வாளர்களுக்கு, துணை காவல் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

நேற்று பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவின்படி, இதுவரை தற்காலிக டி.எஸ்.பி-க்களாகப் பணியாற்றி வந்த 12 அதிகாரிகளின் பதவிகள் இப்போது முறைப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சட்டம் 2016-ன் பிரிவு 17-ன் கீழ், இவர்களுக்கான பணி மூப்பு மற்றும் தகுதியின் அடிப்படையில் இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

பதவி உயர்வு பெற்ற 12 அதிகாரிகளும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் முக்கியப் பிரிவுகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்:

நாகப்பட்டினம் (எம். அறிவழகன்), திருப்பூர் (எஸ். திருஞானசம்பந்தன்), சேலம் (கே. கபிலன்), கரூர் (ஆர். செந்தில்குமார்) மற்றும் தூத்துக்குடி (எம். கண்ணன்) மாவட்டக் குற்றப் பிரிவுகளுக்குப் புதிய டி.எஸ்.பி-க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் (ஆர். சகாய அன்பரசு) மற்றும் ஆவடி மாநகரம் (ஜே. ரமேஷ்) ஆகிய பகுதிகளில் மதுவிலக்கு பிரிவுக்குப் புதிய பொறுப்பாளர்கள் கிடைத்துள்ளனர்.

சேலம் சிறப்புப் பிரிவு நுண்ணறிவுப் பிரிவுக்கு எம். ரவீந்திரன் அவர்களும், மதுரை உயர் நீதிமன்றப் பாதுகாப்பு உதவி ஆணையராக ஆர். செந்தில்குமார் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி-யாக பி. காந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.