கட்சி பேனரால் மீண்டும் ஒரு அசம்பாவிதம்… பேனர் சரிந்து விழுந்து இளம்பெண் படுகாயம்..!

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது. ரோட்டோரங்களில் பாதுகாப்பு இல்லாமல் பேனர் வைப்பவர்களை விடுங்கள்.

இப்படி பேனர் வைப்பவர்களை சினிமா நடிகர்களும், அரசியல் தலைவர்களும் ஏன் கண்டிப்பதில்லை. கட்சி பேதமில்லாமல் எல்லோருமே இதை விரும்புகிறார்கள். பேனர் வைப்பவர்களுக்கு பதவியும், செல்வாக்கும் உயர்கிறது. தமிழகத்தில் பல மரணங்களும், விபத்துக்களும் இப்படி பாதுகாப்பில்லாமல் பேனர் வைப்பதால் நடந்துள்ளது. ஆனாலும், யாரும் திருந்தியதாக தெரியவில்லை. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக பிரமுகரின் இல்ல விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த முடையூர் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பிரமுகரின் இல்லத்திருமண விழா நடைபெற்றது. இதில் அதிமுக பிரமுகர்கள் கலந்து கொள்ள இருந்ததால், தேவிகாபுரம் – போளூர் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் விளம்பரப் பதாகைகள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் தேவிகாபுரம் கிராமத்தைச்சேர்ந்த ரம்யா என்பவர், தனது இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்குச்சென்று கொண்டிருந்தார். அப்போது ரம்யா மீது ஃபிளெக்ஸ் பேனர் விழுந்தது. இதில் படுகாயமடைந்த ரம்யாவை மீட்ட அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக் போளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பேனர் விழுந்து பெண் ஒருவர் பலியான சம்பவத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து அந்த வழக்கை விசாரித்தது. மேலும் சாலை ஓரங்களில் பேனர் வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தற்போது அரசியல்வாதிகளே நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்க விட்டு பொதுமக்களின் உயிர்களோடு விளையாடுவது அதிர்ச்சியளிப்பதாக சமூக ஆர்வளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.