தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக ஏற்கனவே அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், காய்கறிகளின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரத்து குறைந்ததன் காரணமாக வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதாக அங்கிருக்கும் வியாபாரிகள் கூறுகின்றனர். தற்போதைய நிலவரப்படி நெல்லையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.168-க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வெங்காயம் மட்டுமின்றி சமையலுக்கு அன்றாடம் பயன்படுத்தும் பல காய்கறிகளின் விலை தீபாவளி வரை குறைய வாய்ப்பில்லை என கூறப்படுவதால் குடும்பத்தை பொருளாதார ரீதியாக நிர்வகிப்போர் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். பீன்ஸ் மற்றும் அவரைக்காய் ஆகியவற்றின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. 1 கிலோ பீன்ஸ் 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ அவரைக்காய் விலை, தற்போது 80 ரூபாயாக உயர்ந்துள்ளது. பச்சை பட்டாணி ஒரு கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது. எலுமிச்சை பழம் ஒரு கிலோ ரூ.250-க்கு விற்பனையாகிறது.
மழை காரணமாக வரத்து குறைந்துள்ளதும், தீபாவளி பண்டிகை நெருங்குவதால் தேவை அதிகரித்திருப்பதும் காய்கறிகளின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. தீபாவளிக்குப் பிறகு புதிய வரத்து அதிகரிக்கத் தொடங்கினால் குறிப்பாக வெங்காயத்தின் விலை குறையக்கூடும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.








