தேனி சிறையில் இருந்து ஒரே நேரத்தில் 17 கைதிகள் தப்பியது எப்படி..?

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறைச்சாலையிலிருந்து நேற்று இரவு 17 கைதிகள் தப்பிச் சென்ற விவகாரம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இந்த சம்பவம் நடந்தவுடன் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கௌதம் மற்றும் தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிடாரி ஆகியோர் சிறை வளாகத்தில் ஆய்வு செய்தனர்.

தப்பிச் சென்ற 17 பேரும் ஒரே சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என கைதிகள் கூறியுள்ளனர். இதையடுத்து சிறை காவலர் அறைக் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அவரை தாக்கி விட்டு 17 பேரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இந்த தாக்குதலில் காயமடைந்த சிறை காவலர் தங்கபாண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்..

தப்பிச்சென்ற 17 பேரில் நாலு பேரை போலீசார் பிடித்து விட்டனர். இன்னும் 13 பேரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டது. சிறைக்கு அருகில் உள்ள கிராமரங்களில் ட்ரோன் மூலம் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. அதேபோல் தமிழ்நாடு – கேரளா எல்லையில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. திண்டுக்கல்லில் பல இடங்களில் சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 31 ஆண்டுகளில் நடந்த மிகப்பெரிய தப்பிப்பு நிகழ்வு இதுவாகும். 1995ம் வருடம் அதிமுக ஆட்சியில் இருந்தபோது சுதந்திர தினத்தன்று வேலூர் கோட்டை சிறையிலிருந்து 43 கைதிகள் 153 அடி நீளத்திற்கு சுரங்கப்பாதை தோண்டி தப்பிச்சென்றனர். அதில் 21 பேர் மட்டுமே பிடிபட்டனர். 31 வருடங்களுக்கு பிறகு தற்போது தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியிருக்கிறார்கள்.